

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில் நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசின் தலையீடு இருந்ததாக கூறியது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் ‘விதவுட் ஃபியர் ஆர் ஃபேவர்’ (Without Fear or Favour) எனும் புத்தகத்தை எழுதியுள்ளார். இன்னும் வெளியாகாத அந்த சுயசரிதை புத்தகத்தை மேற்கோள் காட்டி சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், கொலீஜியம் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பே நீதிபதிகள் நியமனம் குறித்து மத்திய அரசிடம் ஒப்புதல் பெற முயன்றது, சிறுபான்மையின சமுதாயத்தைச் சேர்ந்த நீதிபதி ஒருவரின் சாதி குறித்து அரசு கேள்வி எழுப்பியது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை நீதிபதி கவுல் சுட்டிக்காட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் ஊடகப் பிரிவுப் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ பக்கத்தில் கூறியுள்ளதாவது: இதுவரை பலர் வெளிப்படையாகப் பேசத் தயங்கிய விஷயங்களை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் இப்போது ஆதாரப்பூர்வமாக வெளிக்கொண்டு வந்துள்ளார்.
நீதிபதிகள் நியமனத்துக்கு முன் அரசுடன் பேச்சுவார்த்தை நடந்ததை முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மறுக்கவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
அரசின் தலையீட்டை முன்னாள் தலைமை நீதிபதியே ஒப்புக்கொள்ளும்போது, நீதித்துறையின் சுதந்திரம் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்ற கவலை மேலும் ஆழமாக எழுகிறது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றை நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வு விசாரித்தபோது, முந்தைய தீர்ப்பின் சில பகுதிகளை மறுபரிசீலனை செய்ய நேரிடும் எனக் குறிப்பிட்டது.
அதன் பிறகு, நீதிபதி கவுலின் ஆலோசனையைப் பெறாமலேயே அந்த வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டதாக அவர் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் அன்றாட செயல்பாடுகளிலேயே மத்திய அரசு எந்த அளவுக்குத் தலையிடுகிறது என்பதற்கு இதுவே சான்று. அரசியலமைப்பைப் பாதுகாக்கும் ஒரு அமைப்பு, அதிகாரத்தில் இருப்பவர்களின் அழுத்தத்துக்கு அப்பாற்பட்டு இயங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.