

பிரதமர் மோடி
புதுடெல்லி: ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் கடந்த 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெற்றன. இந்தப் போட்டியில் மொத்தமாக இந்தியா 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கல பதக்கங்களை வென்று, 114 பதக்கங்களுடன் 4-ம் இடத்தில் நிறைவு செய்தது.
இந்நிலையில், பாரா விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் நேற்று கூறியதாவது:
ஆசிய பாரா விளையாட்டு போட்டியை நமது மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் மகத்தான சாதனையுடன் நிறைவு செய்துள்ளனர். 114 பதக்கங்களை வென்று இந்திய வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். இதுதான் இந்தியாவின் மிகச்சிறந்த செயல்பாடு. இந்த நிகழ்வு ஒட்டுமொத்த நாட்டுக்கும் மகிழ்ச்சியும் மிகுந்த பெருமையும் அளித்துள்ளது.
தனித்துவமான விடாமுயற்சியுடன் விளையாடிய ஒவ்வொரு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும் எனது வாழ்த்துகள். ஒவ்வொரு தடகள வீரர், வீராங்கனைகளும் இந்த வரலாற்றுச் சாதனையில் பங்களித்துள்ளனர். தங்களது வெற்றியின் மூலமாக இந்தியர்களுக்கு அவர்கள் உத்வேகத்தை அளித்துள்ளனர். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.