

புதுடெல்லி: அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி சைபர் அடிமைப் பணிக்காக இந்திய இளைஞர்களைக் கம்போடியா மற்றும் தாய்லாந்துக்கு கடத்திய முன்னாள் வணிகக் கப்பல் அதிகாரி ஒருவரை ஆக்ரா போலீஸார் கைது செய்துள்ளனர். இளைஞர்கள் சிலர் தாங்கள் ஏமாற்றப்பட்டு சைபர் மோசடி மையங்களில் சிக்க வைக்கப்பட்டதாக அளித்த புகாரை தொடர்ந்து இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘‘முன்னாள் வணிகக் கப்பல் அதிகாரியான நாகேஷ் குமார், சர்வதேச ஆள் கடத்தல் கும்பலின் முக்கிய தலைவன் ஆவார். வெளிநாடுகளில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, இவரது கும்பல் இந்திய இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளது.
பிறகு இளைஞர்களைத் தாய்லாந்து மற்றும் கம்போடியாவுக்கு அனுப்பியுள்ளது. அங்கு சென்றதும் இந்த இளைஞர்கள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டு, சைபர் மோசடி மற்றும் ஆன்லைன் குற்றங்களில் ஈடுபட கட்டாயப்படுத் தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான புகாரை தொடர்ந்து ஆக்ரா சைபர் குற்றப் பிரிவு விசாரணையைத் தொடங்கியது, போலீஸார் பல இடங்களில் சோதன நடத்தி, இமாச்சல பிரதேசத்தின் பாலம்பூர் பகுதியில் நாகேஷ் குமாரை கைது செய்தனர்’’ என்றனர்.