

டேராடூன்: உத்தராகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக பிராமண சமூகத்தினர், மீண்டும் காங்கிரஸுடன் இணைய வேண்டும் என்று அம்மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹரிஷ் ராவத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உத்தராகண்ட் மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வர உள்ள நிலையில், அங்கு தேர்தல் அரசியல் சூடு பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருந்து வந்த பிராமண சமூகத்தினர், அயோத்தி ராமர் கோயில் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இந்துக்களுக்கு எதிராக அக்கட்சி செயல்படுவதாகக் கூறி பாஜகவுக்கு ஆதரவாக மாறினர். இது பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ள ஹரிஷ் ராவத், “பிராமணர்கள் காங்கிரஸுடன் மீண்டும் இணைய வேண்டும். காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்தது, பிராமண சமூகத்தினரையும் பட்டியல் சமூகத்தினரையும் கடுமையாக பாதித்துள்ளது. அரசு வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளதாலும், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டுள்ளதாலும் பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன.
2022 தேர்தல் தோல்வியில் இருந்து காங்கிரஸ் கட்சி பாடம் கற்றுக்கொண்டுள்ளது. இம்முறை வேட்பாளர் தேர்வில் கட்சி கூடுதல் கவனத்துடன் செயல்படும். வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. அரசு அமைப்பதற்கு குறைந்தபட்சம் 45 எம்எல்ஏக்கள் தேவை. எனவே, வெற்றி வாய்ப்பு உள்ள வேட்பாளர்களுக்கே வாய்ப்பு வழங்கப்படும்.” என தெரிவித்தார்.
தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, இது குறித்த இறுதி முடிவை கட்சிதான் எடுக்கும் என்றார். மேலும், கட்சியின் வெற்றிக்காக உழைப்பதே தனது முதன்மை நோக்கம் என்றும் அவர் கூறினார். தனது மகன் ஆனந்த் ராவத் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, அவர் தகுதியான, வலிமையான வேட்பாளர் என்று நிரூபித்தால் மட்டுமே அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என ராவத் கூறினார்.
காங்கிரஸ் கட்சி முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமா என்ற கேள்விக்கு, கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடப்பார்கள் என்றார். முதல்வர் வேட்பாளராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்படுவீர்களா என்ற கேள்விக்கு, எனக்கு வயதாகிவிட்டது என பதில் அளித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை விட்டு நீங்கள் விலகப் போவதாகக் கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, அது பாஜக பரப்பும் வதந்தி என ராவத் கூறினார்.