“உத்தரப் பிரதேசத்தில் 80% பேர் பாஜகவை ஆதரிக்கின்றனர்” - யோகி ஆதித்யநாத்

“எஞ்சிய 20% பேர் எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள்”
முதல்வர் யோகி ஆதித்யநாத்

முதல்வர் யோகி ஆதித்யநாத்

Updated on: 
1 min read

வாரணாசி: “உத்தரப் பிரதேசத்தில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் பாரதிய ஜனதா கட்சி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிக்கின்றனர். 20 சதவீதம் பேர் சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகளை ஆதரிக்கலாம்” என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யோகி ஆதித்யநாத், “சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் அறிக்கை வெற்று வாக்குறுதிகளின் பட்டியல். அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்த காலத்தில், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டார்.

உ.பியில் இண்டியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸும் ஒரு சதுரங்க விளையாட்டில், ஒருவரை ஒருவர் விஞ்ச முயற்சிக்கும் போட்டியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, ​​காங்கிரஸ் பெரியதா அல்லது சமாஜ்வாதி கட்சி பெரியதா என்ற விவாதத்தில்தான் அவர்கள் மூழ்கியுள்ளனர். இதனால் இரு கட்சிகளும் அச்சத்தில் உள்ளனர்.

கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் சூழலிலேயே, சமாஜ்வாதி கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்திருப்பது அவர்களின் பதற்றத்தையே காட்டுகிறது. இந்தக் கூட்டணி விரைவில் சிதறிவிடும், வேட்பாளர்களும் மாற்றப்படுவார்கள்.

அகிலேஷ் யாதவின் தேர்தல் அறிக்கை பொய்களின் தொகுப்பு. அவர்கள் ஆட்சியில் இருந்தபோது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டனர். 2012-லும் அவர்கள் வேலையின்மை உதவித்தொகை குறித்துப் பேசினார்கள். அப்போது எத்தனை வேலையில்லாதவர்களுக்கு அவர்கள் உதவித்தொகையையும், வேலைவாய்ப்பையும் வழங்கினார்கள். எத்தனை பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தார்கள் என்பதை அவர்கள் சொல்லட்டும்.

தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியை எங்கிருந்து திரட்டப் போகிறார்கள் என்பதை அவர்கள் தெளிவுபடுத்தவில்லை. அவர்களின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இவ்வளவு நிதியை அவர்கள் எங்கிருந்து பெறப் போகிறார்கள் என்பதை விளக்க வேண்டும். ஒருபோதும் நிறைவேற்ற முடியாத, நடைமுறைக்குச் சாத்தியமற்ற கனவுகளை ஏன் பொதுமக்களிடம் காட்டுகிறார்கள்?

சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் உத்தரப் பிரதேசத்தில் ஏழு முறை ஆட்சியில் இருந்தன. ஆனால், அந்த இரண்டு கட்சிகளும் ஆட்சியில் இருந்த காலக்கட்டங்களை விட, கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் எனது அரசாங்கம் இருமடங்கிற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

2027 சட்டமன்றத் தேர்தலில் உ.பியின் வளர்ச்சியை ஆதரிப்பவர்கள், பாரம்பரியத்தின் மீது மரியாதை கொண்டவர்கள், டபுள் என்ஜின் அரசு மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் உறுதியாக நிற்கிறார்கள். உத்தரபிரதேசத்தில் 80 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிக்கின்றனர். எஞ்சிய 20 சதவீதம் பேர் எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள். அவர்கள் எஸ்பி, பிஎஸ்பி, காங்கிரஸ், ஓவைசி அல்லது சந்திரசேகர் என யாரையும் ஆதரிக்கலாம்” என்றார்.

<div class="paragraphs"><p>முதல்வர் யோகி ஆதித்யநாத்</p></div>
“போதைப்பொருள் பழக்கம் இளைஞர்களின் கனவுகளுக்கு பெரும் சவால்” - பிரதமர் மோடி

X