மும்பை யாருக்கு? - ஒரு ‘மினி’ சட்டமன்றத் தேர்தலும், மகாராஷ்டிர அரசியலும்!

மும்பை யாருக்கு? - ஒரு ‘மினி’ சட்டமன்றத் தேர்தலும், மகாராஷ்டிர அரசியலும்!
Updated on
3 min read

இந்தியாவின் இரண்டாவது பெரிய நிதிநிலைத் தலைநகரம் என்று மும்பையைக் கூறிவிடலாம். ஏனென்றால், மும்பை மாநகராட்சியின் ஆண்டு பட்ஜெட் 75 ஆயிரம் கோடி ரூபாய்! அதுமட்டுமல்ல... இந்தியப் பங்குச் சந்தையின் முகமாக இருக்கும் மும்பை ஷேர் மார்க்கெட்டும், இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையகமும், ஆண்டுக்குக் குறைந்தது 15 ஆயிரம் கோடி ரூபாயை படத் தயாரிப்பில் புழங்கவிடும் பாலிவுட் படவுலகமும் அங்குதான் இருக்கின்றன.

கனவுகளின் நகரம் என அழைக்கப்படும் மும்பையில் மராத்தி, குஜராத்தி, தமிழ், பஞ்சாபி, முஸ்லிம், கிறிஸ்தவர் எனப் பல்வேறு இன, மத மக்கள், பல்வேறு சமூகங்களின் சங்கமமாக 2.6 கோடி பேர் வசித்து வருகின்றனர். இந்தக் கலாச்சாரத் தனித்துவத்தோடு, பொருளாதாரம், இயற்கையமைப்பு ஆகியவற்றிலும் சிறந்து விளங்கும் இம்மாநகரில் வசிப்போரில் தினமும் 1.4 கோடி பேர் வேலைக்குச் செல்கின்றனர். உழைப்பின் நகரமாகவும், வட இந்தியாவின் தூங்கா நகரமாகவும் விளங்கிவரும் மும்பை, இன்று மிகப் பெரிய அரசியல் போர்க்களமாக மாறியுள்ளது.

ஏனென்றால், மும்பை மாநகராட்சிக்கு (BMC) ஜனவரி 15-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதே நாளில் மகாராஷ்ட்டிரா முழுவதுமுள்ள மாநகராட்சிகள் அனைத்துக்கும் தேர்தல் நடந்தாலும், வட இந்திய ஊடகங்களும், தமிழக ஊடகங்களுக்கும் மும்பை மாநகராட்சித் தேர்தலுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் பின்னணியில் அந்த நகரத்தின் பன்மைத்துவமும் அரசியல் கூட்டணிகளும் முக்கிய காரணமாக இருக்கின்றன. அதனாலேயே, இது வெறும் உள்ளாட்சித் தேர்தல் என்று கடந்து போய்விட முடியாதபடி மகாராஷ்டிரத்தின் அரசியல் சூழ்நிலை சூடு பிடித்திருக்கிறது. இதை மகாராஷ்டிராவுக்கான ‘ஒரு ‘மினி’ சட்டமன்றத் தேர்தல்’ என்றே அரசியல் நோக்கர்கள் வருணிக்கின்றனர்.

‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’

மும்பை உள்ளாட்சித் தேர்தலின் மிக முக்கியமான திருப்பம் என்பது, சுமார் இரு பத்தாண்டுகளாகத் தனித்தனியாகப் பயணித்த உத்தவ் தாக்கரேவும், ராஜ் தாக்கரேவும் ஒன்றாகக் கைகோத்திருப்பதுதான். இதை தாக்கரே சகோதரர்களின் 'மாஸ்டர் ஸ்ட்ரோக்' என்றால் அது மிகையல்ல. "மராத்தி அடையாளம் ஆபத்தில் இருக்கிறது" என்கிற ஒற்றைப் புள்ளியில் இவர்கள் இணைந்திருப்பது, மராத்தி பேசும் மக்கள் மத்தியில் இன உணர்ச்சி அலையை உருவாக்கியுள்ளது.

குறிப்பாக, குஜராத்தி மக்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் மும்பையின் காட்கோபர் போன்ற பகுதிகளில் பிரச்சாரம் செய்யும்போது, "மும்பையின் மொழி குஜராத்தி" என்று பாஜக கிளப்பிய சர்ச்சை, தாக்கரே சகோதரர்களுக்கு அரசியல் ரீதியாக ‘மராத்தி மானுஸ்' (Marathi Manoos) என்கிற மராத்தி மக்களின் வாக்கு வங்கியை மீட்டுக்கொள்ளப் பேரளவில் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாக்கரே சகோதரர்களில் மூத்தவரான உத்தவ் தாக்கரேவின் நிதானமும், ராஜ் தாக்கரேவின் ஆக்ரோஷமும் இணைந்திருப்பதும், கடைசி நாள் பிரச்சாரத்தில் ‘தானே’ நகரில் அவர்கள் நடத்திக்காட்டிய பிரம்மாண்டத் தேர்தல் பேரணியும், பாஜக - ஏக்நாத் ஷிண்டே கூட்டணிக்குக் கடும் நெருக்கடியைக் கொடுத்துள்ளன.

ஆளும் தரப்புக்கான சவால்

மும்பை மாநகராட்சித் தேர்தலில் மொழி, அடையாள அரசியலைச் சீண்டிவிட்டாலும், பாஜக முதலமைச்சராக இருந்துவரும் தேவேந்திர பட்னவிஸ் - துணை முதலமைச்சராகப் பதவி வகித்துவருபவரும் சிவசேனாவைத் தன்வசமாக்கிக் கொண்டவருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆளும் கூட்டணி, 'வளர்ச்சி' என்கிற துருப்புச் சீட்டை இந்தத் தேர்தலில் தூக்கிப் பிடித்திருக்கிறது.

‘அன்புச் சகோதரி’ (Ladki Bahin Yojana) என்கிற திட்டத்தை 2024-இல் தொடங்கிய ஆளும் பாஜக கூட்டணி, 21 வயது முதல் 65 வயது வரையிலான தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் மாதாந்திர நிதியுதவி வழங்கும் திட்டத்தைத் தவணைகளாக வழங்கிவருவது, தேர்தல் களத்தில் அக்கூட்டணிக்கு ஒரு கேடயமாக இருக்கிறது.

ஆனால், “தவணைமுறையில் இல்லாமலேயே, ஸ்வாபிமான் நிதித் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும் என்கிற வாக்குறுதியுடன், 700 சதுர அடிவரை கொண்ட சிறு வீடுகளுக்குச் சொத்து வரியிலிருந்து விலக்கு, 100 யூனிட் வரை இலவச மின்சாரம், குப்பை வசூலிக்கச் செய்யப்பட்டு வரும் கட்டணம் ரத்து, பெண்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு இலவசப் பேருந்துப் பயணம்” என இலவசத் திட்டங்களை தாக்கரே சகோதர்கள் கூட்டணி அடுக்கியிருக்கிறது.

இதை எதிர்பார்க்காத பாஜக, "நாங்கள் வேலை செய்கிறோம், அவர்கள் குடும்ப அரசியல் செய்கிறார்கள், நாங்கள் மும்பைக்கு ஒரு மராத்தியையே மாநகரத்தந்தை ஆக்குவோம் என்று" என்று பிரச்சாரம் செய்திருக்கிறார்கள்.

12 லட்சம் தமிழர்கள்

மும்பை வாக்கு அரசியலில் தமிழர்களின் பங்கு என்பது தவிர்க்க முடியாதது. தாராவி, அந்தேரி, செம்பூர், மலாடு போன்ற பகுதிகளில் சுமார் 12 லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். இவர்களின் வாக்குகள் சுமார் 25-க்கும் அதிகமான வார்டுகளில் வெற்றியைத் தீர்மானிக்கக் கூடியவை.

சமீபத்தில், தமிழக பாஜகவின் முன்வரிசைத் தலைவர்களில் ஒருவரான அண்ணாமலை, தாராவியில் மேற்கொண்ட பிரச்சாரமும் பெரிய சர்ச்சையாகியிருக்கிறது. “மத்தியில் நரேந்திர மோடி அரசும், மாநிலத்தில் தேவேந்திர பட்னாவிஸ் அரசும் ஆட்சியில் இருப்பதால் மும்பைக்கும் பாஜக மேயர்தான் தேவை” என்று வலியுறுத்திவிட்டு, “மும்பை மகாராஷ்டிர நகரம் கிடையாது. அதுவொரு சர்வதேச நகரம்” என்று பேசப்போய், அதுவும் சர்ச்சையாகியிருக்கிறது.

அண்ணாமலையில் இந்தப் பிரச்சாரத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக உத்தவ் தாக்கரே அணியின் எம்.பியான சஞ்சய் ராவுத் “பாஜக, நட்சத்திரப் பேச்சாளர்களைப் பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறது; அண்ணாமலை, மும்பைக்காக போராடி உயிர்த் தியாகம் செய்த 106 தியாகிகளை அவமதித்துவிட்டார்” என்று கூற, வேறு வழியில்லாமல், “சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் இருக்கும் வரை மும்பை மாநகரம், மகாராஷ்டிராவுடந்தான் இருக்கும்” என்று சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவர முயன்றிருக்கிறார் பட்னாவிஸ்.

இதற்கிடையில் அண்ணாமலையின் பேச்சுக்கு ராஜ் தாக்கரே கொடுத்த எதிர்வினையும் இம்முறை மும்பைத் தமிழர்களை உன்னிப்பாகக் கவனிக்க வைத்துள்ளது. என்றாலும் உணர்ச்சி அரசியலைக்கு அப்பால், மராட்டிய அரசியலில் தமிழர்கள் எப்போதும் வேட்பாளரின் அணுகுமுறைக்கே முக்கியத்துவம் தந்து வந்திருக்கிறார்கள்.

“எங்கள் பகுதிக்கு வருபவர் யார்? எங்கள் மொழியில் பேசுபவர் யார்?” என்பதை விட, “எங்கள் குடிநீர், வீட்டுப் பிரச்சனையைத் தீர்ப்பவர் யார்?” என்பதே மும்பைத் தமிழர்களின் கேள்வியாக இருக்கும்.

தார்மிகப் போராட்டமா? அதிகாரப் போட்டியா?

மும்பை மாநகராட்சித் தேர்தல் தாக்கரே சகோதரர்களுக்கு ஒரு தார்மிகப் போராட்டமாக மாறியிருக்கிறது. கட்சி, சின்னம், மற்றும் ஆட்சியை இழந்த பிறகு, அவர்கள் மீண்டும் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

பாஜகவைப் பொறுத்தவரை, மும்பையைத் தன்வசப்படுத்துவது மராட்டிய மாநிலம் முழுவதையும் தன் பிடிக்குள் கொண்டு வருவதற்குச் சமம். நாளை மறுநாள் பதிவாகும் வாக்குகள், மும்பையின் வளர்ச்சி, ஸ்திரத்தன்மையை மட்டும் தீர்மானிக்கப் போவதில்லை; மும்பையின் தனித்துவமான கலாச்சார அடையாளத்தையும், தாக்கரே குடும்பத்தின் அரசியல் வாழ்வையும் தீர்மானிக்கப் போகிறது.

முடிவுகள் எதுவாக இருந்தாலும், வாக்குகள் எண்ணப்படும் ஜனவரி 16-ஆம் தேதி என்பது மராட்டிய அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

மும்பை யாருக்கு? - ஒரு ‘மினி’ சட்டமன்றத் தேர்தலும், மகாராஷ்டிர அரசியலும்!
ராஜா சாப்: திரைப் பார்வை - பிரபாஸ் தலை தப்பியதா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in