

‘கல்கி 2898’ படத்தின் அகில இந்திய வெற்றிக்குப் பிறகு, ‘கண்ணப்பா’, ‘மிராய்’ ஆகிய தெலுங்குப் படங்களில் கேமியோ செய்திருந்தார் பிரபாஸ். கேமியோ என்றாலும் பிராபாஸுக்கு இரண்டு கதாபாத்திரங்களுமே உரிய முக்கியத்துவத்துடன் இருந்தன. இதற்கிடையில், பிரபாஸை உச்சாணிக் கொம்பில் தூக்கி வைத்த ‘பாகுபலி’ படங்களை இணைத்து ஒரே படமாக 2025-இல் வெளியிட, அது எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை என்றாலும் ரூ.55 கோடி வசூலித்துக் கொடுத்தது.
இதிலிருந்து தெரிய வந்த உண்மை, பிராபாஸை ஒரு பான் இந்தியன் ஹீரோவாக மாற்றியது ‘பாகுபலி’ அல்ல; ‘கல்கி 2898’ படம்தான்! ஆமாம்! 600 கோடி முதலீட்டில் எடுக்கப்பட்ட அந்தப் படம், ‘Dystopian - Post - Apocalyptic - Science Fiction - Indian mythology’ ஆகிய நான்கு ஜானர்களை பக்காவாகக் கலந்து உருவாக்கிய ஓர் அதிசயம் உலகமாக அமைந்தது.
மேலும், கிராஃபிக்ஸ் மற்றும் வி.எஃப்.எக்ஸ் காட்சிகளின் தரம், ஹாலிவுட்டுக்கு நெருக்கமாக வடிவமைக்கப்பட்டிருந்தன. இதனால், மொழிகளைக் கடந்து ரசிகர்கள் தரமான திரை அனுபவத்தைப் பெற்றனர். விளைவாக, வெளிநாட்டு வசூல் உள்பட ரூ.1100 கோடி வசூல் செய்தது. இந்தியாவில் மட்டுமே ரூ.750 கோடி வசூல் செய்தது.
இந்த நிலையில்தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்த ‘ராஜா சாப்’ (The Raja Saab) ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களின் பொங்கல் பண்டிகையான மகா சங்கராந்தியை முன்னிட்டு வெளியானது.
மலையாளத்தில் தெலுங்கு மொழி மாற்றுப் படங்கள் பெரிய தாக்கத்தை உருவாக்குவதில்லை என்றாலும், தமிழ்நாட்டில் ‘பாகுபலி’க்குப் பிறகு பல படங்கள் 12 கோடி முதல் 153 கோடி வரை வசூல் செய்திருக்கின்றன. அவற்றில் ‘பாகுபலி 2’ படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்ததால் 153 கோடி ரூபாயைத் தமிழ்நாட்டில் வசூல் செய்தது.
ஆனால் ‘கல்கி 2898’ எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், பெரிய பரப்புரை இல்லாமல் வெளியாகி ‘வேர்ட் ஆஃப் மவுத்’ வழியாகவே 46 கோடி ரூபாயை வசூலித்தது. இதில் கமல்ஹாசன் ஏற்றிருந்த ‘சுப்ரீம் யாஸின்’ வில்லன் வேடத்துக்கும் பெரிய பங்குண்டு என்றாலும் பிரபாஸை ஒரு பொழுதுபோக்கு மசாலா நாயகனாகவும், அவர் உலவும் சினிமேட்டிக் யுனிவர்ஸ்களில் அல்லாடும் மக்களின் மீட்க வரும் ரட்சகனாகவும் சித்தரிக்கும் பொழுதுபோக்கு கதைக்களங்களுக்கு மொழி கடந்த வரவேற்பு உருவானதன் காரணமாகவே அவரை ‘பான் இந்திய’ நட்சத்திரமாகப் பார்த்தார்கள்.
பாலிவுட்டின் ஷாரூக் கான், ரன்வீர் வரை யாருடைய படங்களும் தென்னிந்தியாவில் ஓடாத நிலையில், இந்தி பேசும் மாநிலங்களில் பிரபாஸின் ‘கல்கி 2898’ இந்திப் பதிப்பு ரூ.288 கோடி வசூல் செய்தது.
இப்படிப்பட்ட சூழலில்தான் பிரபாஸின் ‘ராஜா சாப்’ வெளியானது. அது தெலுங்கு ரசிகர்களையும் பிறமொழி ரசிகர்களையும் திருப்திப்படுத்தியதா என்று பார்த்துவிடலாம்.
‘ராஜா சாப்’ என்கிற ராஜு (பிரபாஸ்), தன்னுடைய பாட்டி கங்கம்மாவுடன் (ஸரீனா வஹாப்) வசித்து வருகிறார். கங்கம்மா அல்சைமர் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர். அவருக்குப் பல விஷயங்கள் மறந்து போனாலும், பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தன்னுடைய கணவர் கனகராஜுவைப் (சஞ்சய் தத்) பற்றி மட்டும் மறக்காமல், அவரைப் பற்றியே அடிக்கடிப் பேசிக்கொண்டே இருப்பவர். ‘உன்னுடைய தாத்தா இன்னும் உயிரோடுதான் இருக்கிறார், அவரைத் தேடி கண்டுபிடித்து அழைத்து வா’ என்று ராஜுவிடம் கூறுகிறார்.
பாட்டியின் மீது உயிரையே வைத்திருக்கும் ராஜு தனது பாட்டியின் ஆசையை நிறைவேற்ற ஹைதராபாத்துக்குச் செல்கிறார். அங்கே தனது தாத்தாவை நண்பர்களின் உதவியுடன் தேடி அலையும்போது நர்சபூர் என்கிற காட்டின் நடுவே இருக்கும் ஒரு பிரம்மாண்டமான பாழடைந்த பழைய அரண்மனை பங்களாவைப் பற்றிக் கேள்விப்படுகிறார்.
ராஜுவும் அவருடைய நண்பர்களும் அந்தப் பங்களாவுக்குள் செல்கின்றனர். அங்கு அவருக்குப் பல அமானுஷ்ய அனுபவங்கள் ஏற்படுகின்றன. ஆனால், அந்த அரண்மனையை விட்டு அவர்களால் வெளியே வரமுடியவில்லை. அதற்கான காரணமும் தெரிய வருகிறது. ராஜுவின் தாத்தா கனகராஜு ஒரு சாதாரண மனிதர் அல்ல; அவர் மந்திர தந்திரங்களில் கைதேர்ந்த ஓர் ஆண் சூனியக்காரர்.
அழிவே இல்லாத வாழ்வு வாழ தீயசக்திகளின் துணையை நாடி அதில் பாதி வெற்றிபெற்றிருக்கும்போது, அவர் உயிரிழந்து ஆவியாக அந்த அரண்மனையிலேயே சுற்றிக்கொண்டிருக்கிறார். ஆவியானாலும் தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக்கொள்ளத் துடிக்கும் அந்த ஆவிக்கும் அதனுடைய பேரனுக்குமான போராட்டம்தான் கதை.
தெலுங்கு சினிமாவுக்கே உரித்தான 'மாஸ்' எலிமெண்ட்ஸை படம் முழுவதும் சிதறவிட்டிருக்கிறார் இப்படத்தை எழுதி, இயக்கியிருக்கும் மாருதி.
‘சலார்’ உள்ளிட்ட பிரபாஸின் முந்தைய சில படங்களில் வில்லனைப் பறக்கவிட்டு அடிப்பது போன்ற காட்சிகள் இதிலும் உண்டு என்றாலும், அவை ஹாரர் மற்றும் ‘பேரா-நார்மல்’ பின்னணியில் வடிவமைக்கப்பட்டிருப்பது வித்தியாசமாக இருக்கிறது.
நாயகனுக்கு செமத்தியாக தண்ணி காட்டும் வில்லனிடமிருந்து தப்பிப்பதற்கான உத்தியைச் சொல்லித்தரும் டாக்டர் பத்மபூஷன் (போமன் இரானி) கதாபாத்திரத்தை மனநல ஆலோசகராகவும் பாராநார்மல் நிபுணராகவும் திரைக்கதையின் சரியான இடத்தில் இணைத்தது வில்லனை நாயகனைவிட வில்லனை சுப்ரீம் ஆக காட்டியிருப்பது பிரபாஸ் ரசிகர்களைக் கடுப்பாக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம். ஏனென்றால் அவர் தன்னுடைய தாத்தா ஆவியிடம் தாறுமாறாக அடிவாங்கிக்கொண்டே இருக்கிறார்.
இறுதியில், ராஜு தனது மனவலிமையைப் பயன்படுத்தி (Self-hypnosis), ஒரு மாற்று உலகத்தை (Parallel Dimension) உருவாக்கி, தனது தாத்தாவின் ஆவி செய்யும் அட்டகாசங்களை முறியடிப்பதற்குள் படத்தின் நீளம் 2.55 நிமிடம் ஆகிவிடுவது அவரது ரசிகர்களை என்றல்ல; பிறமொழி ரசிகர்களையும் சோதித்துவிடுகிறது. படத்தின் நீளம் 3 மணி நேரம் 3 நிமிடம்.
என்றாலும் பேய்களுடன் பிரபாஸ் மோதும் ஆக்ஷன் காட்சிகள் புதுமையாக உள்ளன. வெறும் அடிதடிப் படமாக இல்லாமல், ஒரு ஃபேண்டஸி அனுபவத்தைக் காதலுடன் கலந்து தந்திருப்பதால் இந்த நீளத்தை பொறுத்துக்கொள்ளலாம். குறிப்பாக நிதி அகர்வால் - மாளவிகா மோகனன் ஆகியோருடன் கடைசியாக வந்து நிற்கும் ராஜுவின் முறைப் பெண்ணாக வரும் ரித்திகுமாரும் சேர்ந்துகொண்டு ராஜுவை பங்குபோடும் காதல் ஆட்டத்தில் கவர்ச்சியை வாரி வழங்கியிருக்கிறார்கள்.
கன்னியாஸ்திரி ஆகும் படிப்பில் இருக்கும் நிதி அகர்வாலை சினிமாத்தனமாக காட்டியிருந்தாலும் ஒரு கட்டத்தில் உஷாராகி, இயக்குநர் ‘பேக்ரவுண்ட் செக்’ செய்து அந்தக் கதாபாத்திரத்தின் மீது அவதூறு நேர்ந்துவிடாதவாறு உஷாராக மாற்றி தப்பித்திருக்கிறார்.
படத்தில் ரசிக்க முடிகிற அம்சங்களில் பிரபாஸின் காமெடி ஆக்ஷன் ஸ்டைல், ஜாக்கி சானை காப்பியடித்ததுபோல் நன்றாக இருந்தாலும் ஒரு பப்ளி மற்றும் ஜாலியான ஹீரோவாகப் பார்க்க அவரை வம்படியாக சித்தரித்திருப்பதை இயக்குநர் மாருதி தவிர்த்திருக்கலாம். ஏனென்றால் பிராபஸின் முறுக்கேறிய உடம்பில் இருக்கும் இளமை முகத்தில் மிஸ்ஸாகியிருக்கிறது. ஒப்பனையை மீறி முதுமை எட்டிப்பார்க்கிறது.
தாத்தாவின் ஹாரர் அரண்மனை பங்களாவுக்குப் போவதற்கு முன்னர் பிரபாஸுக்கு அமைக்கப்பட்டிருக்கும் 2 சண்டைக் காட்சிகள், தெலுங்கு ரசிகர்களுக்குப் பழகிப்போன ஈர்ப்பு விசைக்கு அப்பாற்பட்ட சாகசமாக அமைத்திருப்பது யதார்த்தமான ஸ்டண்களை விரும்பும் மலையாள, தமிழ் ரசிகர்களுக்கு உறுதியாகச் சலிப்பை ஏற்படுத்தும் ஸ்டண்டு கோரியோகிராபி.
வித்தியாசமான ஹாரர் - பேரா-நார்மல் நகைச்சுவை காதல் கதைக்களமாக இருந்தாலும் படத்தின் வி.எஃப்.எக்ஸ் மற்றும் சிஜிஐ காட்சிகளின் தரம் ‘கல்கி 2898’ அளவுக்கு இல்லாவிட்டாலும் ஹாரர் களத்துக்கு ஏற்றபடி ஏமாற்றம் அளிக்காத அளவில் பணத்தைக் கொட்டித் தரத்தைக் கொண்டுவந்துள்ளனர்.
குறிப்பாக படத்தின் கலை இயக்கத்தையும் வி.எஃப்.எக்ஸையும் இணைத்த விதத்தில் ‘மேக்கிங்’கில் மிரட்டியிருக்கிறார்கள். இந்தத் தரத்தைக் கொண்டுவருவதற்கு ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவு பேரளவில் கைகொடுத்துள்ளது. அதேபோல் தமன் கொடுத்துள்ள பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் படத்தை ஒரு திருவிழா கொண்டாட்டமாக மாற்றுவதற்குப் பெரிய உதவி இருக்கிறது.
இந்திய மாஸ் மசாலா சினிமாவில் இவ்வளவு நேர்த்தியான ஹாரர் - ஆக்ஷன் விஷுவல்ஸ் வருவது அரிது. ஆச்ஷன் காட்சிகளில் உள்ள லாஜிக் மீறல்களைப் பொருட்படுத்தும் பார்வையாளர்களுக்கு ‘ராஜா சாப்’பின் ஆர்ப்பாட்டம் பிடிக்கவே பிடிக்காது. ஆனால், பிரபாஸை ஒரு காதல் நாயகனாகவும் ஆக்ஷன் நாயகனாகவும் காணவிரும்பும், அவருடைய படங்களின் மேக்கிங் பிரம்மாண்டத்தை ரசித்தால் போதும் என நினைக்கும் ரசிகர்களுக்கு நல்ல பண்டிகை விருந்து.