

விஜயவாடா: ஆந்திர காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிமருந்து வெடித்ததில் 4 போலீஸார் படுகாயம் அடைந்தனர்.
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் சல்லிபல்லி பகுதியில் காவல் நிலையம் உள்ளது. இங்குள்ள போலீஸார் நேற்று சட்டவிரோதமாக வெடிமருந்து விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஓரிடத்தில் சோதனை நடத்தி, வெடிமருந்துகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவற்றை ஒரு ஜீப்பில் காவல் நிலையம் கொண்டு வந்து பத்திரப்படுத்த முயன்றனர்.
அப்போது திடீரென வெடிமருந்து பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் சப் இன்ஸ்பெக்டர், ஜீப் ஓட்டுநர் மற்றும் 2 கான்ஸ்டபிள்கள் படுகாயம் அடைந்தனர். மேலும் காவல் நிலையத்தில் இருந்த மேஜை, நாற்காலிகள், ஜன்னல் கண்ணாடிகள், வெளியில் இருந்த போலீஸ் வாகனம் போன்றவை சேதம் அடைந்தன.
இந்த சம்பவத்தில் காயமடைந்த போலீஸார் விஜயவாடாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சப்-இன்ஸ்பெக்டரின் நிலைமை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அனிதா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.