

ஹைதராபாத்: கடந்த 9 ஆண்டுகளாக வரி பாக்கி செலுத்தாததற்காக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான ஹைதராபாத்தில் உள்ள வீட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ‘சீல்’ வைத்தனர்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஹைதராபாத்தில் திராட்சை தோட்டம் மற்றும் யூசஃப்கூடா சர்க்கிள் - 38, ஸ்ரீநகர் காலனியில் 4 அடுக்கு மாடி சொகுசு வீடு உள்ளது. இந்த வீட்டின் எண் 8-3-1099-ஏ ஆகும். இந்த வீட்டில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் அலுவலகத்தின் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், ”கடந்த 2017ம் ஆண்டு முதல் இதை வீடாக உபயோகப்படுத்தி வருகிறோம். அதன்படி வரி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஜெயலலிதாவின் உறவினர் தீபக் ஜெயக்குமார், ஹைதராபாத் மாநகராட்சிக்கு விண்ணப்பித்திருந்தார்.
ஆனால், கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்த வீட்டுக்கு யாரும் வரி செலுத்த முன்வராத காரணத்தால் இதுவரை ரூ.82,91,822 வரி பாக்கி செலுத்த வேண்டி உள்ளது. இது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் ஹைதராபாத் மாநகராட்சியின் உதவி ஆணையர் சுரேஷ், ஜெயலலிதாவின் உறவினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
ஆனால், மார்ச் 31ம் தேதி இதற்கான கடைசி நாள் என்பதால், இதுவரை யாரும் அந்த வீட்டுக்கு வரி செலுத்தவில்லை. இதையடுத்து, ஹைதராபாத் மாநகராட்சி ஏஎம்சி பால்ராஜ் தலைமையில் சென்ற ஊழியர்கள் ஜெயலலிதாவின் வீட்டிற்கு ‘சீல்’ வைத்தனர்.