திருவனந்தபுரம்: எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும், அதிவேக ரயில் இணைப்பு ஏற்படுத்தப்படும், பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை கேரள பாஜக அளித்துள்ளது.
140 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கேரள சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
தேர்தலுக்கு இன்னும் 8 தினங்களே உள்ள நிலையில், வாக்கு சதவீதத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் பாஜக, தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் முன்னிலையில், கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
பாஜக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
கேரளாவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்; மாநில தலைநகர் திருவனந்தபுரத்தை தகவல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் தலைநகராகவும், கொச்சியை கப்பல் கட்டும் மையமாகவும், கோழிக்கோட்டை சுகாதாரம் மற்றும் மருத்துவ புத்தாக்க மையமாகவும், திருச்சூரை கலாச்சார சுற்றுலாத் தலைநகராகவும், கொல்லத்தை கடல்சார் ஏற்றுமதிக்கான மையமாகவும், கண்ணூரை பாதுகாப்பு புத்தாக்க மையமாகவும் மேம்படுத்தப்படும். இந்த துறைசார் மையங்கள் கணிசமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
ஏழைப் பெண்களுக்கு மருந்துகள் மற்றும் மளிகைப் பொருட்களை வாங்க மாதம்தோறும் ரூ.2,500 வழங்கும் பக்ஷய ஆரோக்கிய சுரக்ஷா திட்டம் தொடங்கப்படும்.
திருவனந்தபுரம் - கண்ணூர் இடையே அதிவேக ரயில் போக்குவரத்து ஏற்படுத்தப்படும்; ஏழைக் குடும்பங்களுக்கு ஓணம் பண்டிகையின்போதும் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போதும் இரண்டு இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும்.
ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம்தோறும் 20 ஆயிரம் லிட்டர் நீர் வழங்கப்படும்; சபரிமலை மற்றும் குருவாயூர் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகங்கள் சீரமைக்கப்படும்; முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் விநியோகிப்பதை உறுதி செய்வதோடு கேரளாவின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய நிதின் நபின், ‘‘இடது ஜனநாயக முன்னணியும்(எல்டிஎப்), ஐக்கிய ஜனநாயக முன்னணியும் (யுடிஎப்) ஒன்றுக்கொன்று ஆதரவாக இயங்கி வருகின்றன. இதன்மூலம் இவர்கள் கடந்த 70 ஆண்டுகளாக கேரளாவை மாறி மாறி ஆட்சி செய்து வருகிறார்கள். இவர்களை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதன் மூலம் இந்த சுழற்சிக்கு இம்முறை கேரள மக்கள் முற்றுப்புள்ளி வைக்க இருக்கிறார்கள்’’ என தெரிவித்தார்.