புதுடெல்லி: பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாரோவ் மே 14-ம் தேதி இந்தியா வர உள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், வரும் மே 14-15 ஆகிய தேதிகளில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாரோவ் புதுடெல்லிக்கு வருகை தர உள்ளார். இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவு இணை அமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ, டாஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘‘ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாரோவ் இந்த ஆண்டு மே 14-15 தேதிகளில் நடைபெறும் பிரிக்ஸ் அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.
இந்திய தலைமையின் கீழ் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட உள்ள இறுதி ஆவணங்களில் தொகுப்பு மற்றும் பொது வரைவுகளைத் தீர்மானிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக இது அமையும். பிரிக்ஸ் நிகழ்வுகளோடு, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட இந்திய அதிகாரிகளைச் சந்திக்கவும் லாரோவ் திட்டமிட்டுள்ளார்’’ என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்தியா - ரஷ்யா இடையேயான இருதரப்பு உயர்மட்ட ராஜதந்திர ஈடுபடாட்டை சுட்டிக்காட்டி கடந்த 23-ம் தேதி பேசிய செர்கி லாரோவ், ‘‘இந்தியாவுடனான இருதரப்பு கூட்டாண்மை என்பது நீடித்த தன்மை கொண்டது. இதை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் மாஸ்கோ மிகுந்த எதிர்பார்ப்புடன் உளளது. 2026-ம் ஆண்டில் பிரதமர் மோடியை ரஷ்யாவில் வரவேற்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்தியா - ரஷ்யா இடையேயான உறவு, சமத்துவம், பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதை, ஒருவருக்கொருவர் நலன்களுக்கு உரிய கவனம் செலுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் நாடுகளுக்கு இடையேயான உறவுகள் எவ்வாறு கட்டமைக்கப்பட வேண்டும் என்பதற்கு ஒரு முன்மாதிரியாகத் திகழும். இது காலத்தால் வென்ற நட்பின் மீது கட்டப்பட்டுள்ள உறவு’’ என்று தெரிவித்திருந்தார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய 4 நாடுகளின் கூட்டமைப்பாக பிரிக் அமைப்பு கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2011-ல் இந்த கூட்டமைப்பில் தென் ஆப்ரிக்கா இணைந்தது. இதையடுத்து இந்த கூட்டமைப்பு பிரிக்ஸ் என பெயர் மாற்றம் பெற்றது. 2024-ல் எகிப்து, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், எத்தியோப்பியா ஆகிய நாடுகள் இந்த கூட்டமைப்பின் முழு நேர உறுப்பினர்களாக இணைந்தன. கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெலாரஸ், பொலிவியா, கஜகஸ்தான், கியூபா, மலேசியா, தாய்லாந்து, உகாண்டா, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வ பார்ட்னர்களாக இணைந்தன. கடந்த ஜனவரி 17 முதல் நைஜீரியாவும் இந்த அந்தஸ்தைப் பெற்றுள்ளது.