‘மலிவான அரசியல்’ - காங். மேடையில் பிரதமர் மோடி குறித்த கிண்டலுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம்

‘மலிவான அரசியல்’ - காங். மேடையில் பிரதமர் மோடி குறித்த கிண்டலுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம்
Updated on
1 min read

புதுடெல்லி: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் காங்கிரஸ் கட்சி நடத்திய மாணவர்களின் குரல் என்ற நிகழ்ச்சியில், மேடை நகைச்சுவை கலைஞர் புல்கித் மணி, பிரதமர் நரேந்திர மோடியைப் போன்று பேசி கிண்டல் செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பாஜகவின் மூத்த தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, காங்கிரஸ் கட்சி காமெடியன்கள் மற்றும் கோமாளிகளின் கட்சியாக மாறிவிட்டதாகவும், அவர்களின் அரசியல் முடிவுற்றுவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.

பாஜக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.கேசவன் இச்சம்பவத்தைக் கடுமையாக சாடியுள்ளார். மலிவான, நாகரிகமற்ற முறையில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியை எந்தவொரு கண்ணியமான நபரும் ரசிக்க மாட்டார் என்றும், ராகுல் காந்தியின் இதுபோன்ற அணுகுமுறைதான் இளைஞர்களிடையே அவருக்கு ஆதரவு குறையக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் காங்கிரஸ் மாணவர் அமைப்பான என்எஸ்யுஐ தோல்வியடைந்ததை சுட்டிக்காட்டிய அவர், ராகுல் காந்தியின் வெறுப்பு அரசியலை இளைஞர்கள் முற்றிலுமாக நிராகரித்துவிட்டனர் எனக் கூறினார்.

மத்திய கல்வி அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, டெல்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியின் மறைந்த தாயாரைக் கிண்டல் செய்யும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்திருந்ததாகவும், இது நாட்டின் 'நாரி சக்தி' எனப்படும் பெண்மைக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தூரில் நடைபெற்ற மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில், ராகுல் காந்தியுடன் மேடையைப் பகிர்ந்துகொண்ட நகைச்சுவைக் கலைஞர் புல்கித் மணி, பிரதமர் மோடியின் பேச்சு நடை, வெளிநாட்டுத் தலைவர்களுடனான உரையாடல்களை பகடியாக செய்து காட்டினார்.

குறிப்பாக, பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் மற்றும் மூத்த பெண்மணி ஒருவருக்கு இருக்கை வழங்கி உபசரித்த நிகழ்வுகளைக் கிண்டல் செய்யும் வகையில் 'மை ஃபிரண்ட்' மற்றும் 'கிரேட் ஹராஸ்மென்ட்' போன்ற சொற்களைப் பயன்படுத்தி அவர் பேசியதும், அதற்கு ராகுல் காந்தி சிரித்ததும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 

‘மலிவான அரசியல்’ - காங். மேடையில் பிரதமர் மோடி குறித்த கிண்டலுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம்
மீரட்டில் மிரட்டிய சூர்யகிரண் விமான சாகசக் குழு - மத்திய அமைச்சர் உள்ளிட்டோர் கண்டுகளிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in