மீரட்டில் மிரட்டிய சூர்யகிரண் விமான சாகசக் குழு - மத்திய அமைச்சர் உள்ளிட்டோர் கண்டுகளிப்பு

மீரட்டில் மிரட்டிய சூர்யகிரண் விமான சாகசக் குழு - மத்திய அமைச்சர் உள்ளிட்டோர் கண்டுகளிப்பு
Updated on
1 min read

மீரட்: உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில், இந்திய விமானப்படையின் சூர்யகிரண் விமான சாகச நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் சஞ்சய் சேத் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாகச நிகழ்வை கண்டுகளி்தனர்.

இது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய விமானப்படையின் சூர்யகிரண் விமான சாகசக் குழு, செப்டம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் முதன்முறையாக மீரட்டில், சாகச நிகழ்வுகளை நடத்தியது.

மாணவர்கள், தேசிய மாணவர் படையினர், சாரணர் இயக்கத் தன்னார்வலர்கள் உட்பட ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர், இரண்டு நாட்களில் இந்த சாகசக் காட்சியைக் காண திரண்டனர்.

இன்று (செப்டம்பர் 20) இந்த நிகழ்ச்சியை பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சஞ்சய் சேத் உள்ளிட்டோர் கண்டுகளித்தனர். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் சஞ்சய் சேத் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஒழுக்கம், துல்லியம், குழுப்பணி, தொழில்முறை சேவை ஆகியவற்றின் ஒரு குறிப்பிடத்தக்க கலவை இந்த நிகழ்ச்சி. இந்திய விமானப்படையின் புகழ்பெற்ற திறன்களுக்கு இது ஒரு சான்று’ என்று விவரித்துள்ளார்.

இந்த அணிவகுப்பின் முதல் நாளான நேற்று தனது சமூக ஊடக எக்ஸ் தளத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்ட பதிவில், ‘மூவண்ணக் கொடியின் வண்ணங்களால் வானத்தை அலங்கரித்த விமானிகளின் பிரமிக்க வைக்கும் துல்லியம் பாராட்டுக்குரியது. இது உத்தரப்பிரதேசத்துக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஒரு பெருமைமிக்க தருணம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

1996-ல் நிறுவப்பட்ட சூர்யகிரண் சாகச குழு, ஆசியாவிலேயே 9 விமானங்களைக் கொண்ட ஒரே வானூர்தி சாகசக் குழு என்ற பெருமையைப் பெற்றுள்ளது. சூர்யாகிரண் ஒரு வானூர்தி சாகசக் குழு என்பதைத் தாண்டி இந்திய விமானப்படையின் தூதுவர்கள்' என்ற வகையில், அது பறக்கும் இடமெல்லாம் விமனப் படையின் சிறப்பையும் சேவை உணர்வையும் எடுத்துச் செல்கிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீரட்டில் மிரட்டிய சூர்யகிரண் விமான சாகசக் குழு - மத்திய அமைச்சர் உள்ளிட்டோர் கண்டுகளிப்பு
இந்தியா - இலங்கை இருதரப்பு கடற்படை பயிற்சி: கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்த முயற்சி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in