ஜென்ஸீ தலைமுறையை ஈர்க்க உயர்மட்ட குழு - பாஜகவின் புதிய நகர்வும் பின்னணியும்

ஜென்ஸீ தலைமுறையை ஈர்க்க உயர்மட்ட குழு - பாஜகவின் புதிய நகர்வும் பின்னணியும்
Updated on
1 min read

புதுடெல்லி: ‘ஜென்ஸீ’ தலைமுறையை ஈர்க்கும் நோக்கிலான செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல பாஜகவில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின், ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக பாஜகவின் உயர்மட்ட வட்டாரம் கூறியது: நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுடனான தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில், ‘ஜென்ஸீ’ (Gen Z - 1990-களின் பிற்பகுதி முதல் 2010-களின் முற்பகுதி வரை பிறந்தவர்கள்) தலைமுறையினரைச் சென்றடையும் செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல பாஜக ஒரு பிரத்யேகக் குழுவை அமைத்துள்ளது.

இந்தத் தொடர்புத் திட்டத்துக்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், தேசியப் பொதுச் செயலாளர்கள் ஸ்மிருதி இரானி, வினோத் தாவ்டே, குஜராத் அமைச்சர் ஹர்ஷ் சங்கவி, சத்தீஸ்கர் அமைச்சர் ஓ.பி.சௌத்ரி உள்ளிட்ட தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இளம் தலைமுறையினருடன் நேரடியாகவும், தொடர்ச்சியாகவும் உரையாடலை மேற்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாக, ‘ஜென்ஸீ’ பிரிவினருக்கான இந்தத் தொடர்புத் திட்டத்தை பாஜக விரைவில் தொடங்கவுள்ளது.

இத்திட்டமானது ‘ஜென்ஸீ’ தலைமுறையினரின் விருப்பங்கள், கவலைகள் மற்றும் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்தும். மேலும், இளைஞர்கள் பாஜக தலைவர்களுடன் நேரடியாக உரையாடவும், தங்களைப் பாதிக்கும் விவகாரங்கள் குறித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளவும் ஒரு தளத்தை வழங்கும்.

கலந்துரையாடல்கள், விவாதங்கள் மற்றும் பிற நடவடிக்கைகள் மூலம் இளம் வாக்காளர்களுடனான தொடர்பை வலுப்படுத்தவும், தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தவும் கட்சி இந்த முயற்சியைப் பயன்படுத்திக்கொள்ளும்.

பல்வேறு அமைப்பு மற்றும் அரசியல் பின்னணிகளைக் கொண்ட தலைவர்கள் இக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். அமைப்பு ரீதியான அனுபவத்தையும் இளம் தலைமையையும் ஒன்றிணைப்பதில் பாஜகவுக்கு இருக்கும் தீவிரத்தை இது உணர்த்துகிறது.

‘ஜென்ஸீ’ தலைமுறையினருக்கான செயல்திட்டம் தொடர்பான கால அட்டவணை, வடிவம், இடங்கள் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, புதிதாக அமைக்கப்பட்ட கட்சியின் தேசியக் குழுவின் முதல் அறிமுகக் கூட்டம் புதுடெல்லியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் தலைமை தாங்கினார். பாஜக நிர்வாகிகளின் புதிய பயணத்தின் தொடக்கத்தை அதிகாரப்பூர்வமாகக் குறிக்கும் வகையில் இந்தக் கூட்டம் அமைந்தது. கூட்டத்தக்கு முன்னதாக தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' முழுமையாக பாடப்பட்டது.

ஜென்ஸீ தலைமுறையை ஈர்க்க உயர்மட்ட குழு - பாஜகவின் புதிய நகர்வும் பின்னணியும்
“எப்ஐஆர் பதிவு செய்ய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் 7 மணி நேரம் போராட வேண்டி உள்ளது” - ப.சிதம்பரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in