“எப்ஐஆர் பதிவு செய்ய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் 7 மணி நேரம் போராட வேண்டி உள்ளது” - ப.சிதம்பரம்

“எப்ஐஆர் பதிவு செய்ய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் 7 மணி நேரம் போராட வேண்டி உள்ளது” -  ப.சிதம்பரம்
Updated on
1 min read

புதுடெல்லி: பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில் டெல்லியில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்படுவதற்கு 30 நாட்களும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரின் ( Leader of the Opposition) ஏழு மணி நேர தர்ணா போராட்டமும் தேவைப்பட்டுள்ளன என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

டெல்லியில் ஜூலை 20 அன்று நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற சாஹில் லோச்சவ் எனும் இளைஞர் பெல்லட் குண்டு தாக்குதலுக்கு உள்ளானார். இது தொடர்பாக டெல்லி போலீசில் அவர் புகார் அளித்தார். எனினும், அந்த புகார் முதல் தகவல் அறிக்கையாக பதியப்படவில்லை.

இதைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட சாஹில் லோச்சவ் உடன் இணைந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற வீதியில் உள்ள காவல் நிலையத்தில் முறையிட்டார். பின்னர், அவர்கள் காவல் நிலையம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று காலை தொடங்கிய இந்த போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிரியங்கா காந்தி, ஜெயராம் ரமேஷ், குமாரி செல்ஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். 7 மணி நேர தொடர் போராட்டத்துக்குப் பிறகு புகார் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டு அதன் நகல் காவல்துறை சார்பில் வழங்கப்பட்டது.

இதை சுட்டிக்காட்டி ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில் டெல்லியில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவதற்கு 30 நாட்களும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரின் ஏழு மணி நேர தர்ணா போராட்டமும் தேவைப்பட்டன.

ஒவ்வொரு புகாரின் மீதும் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்பதே உச்ச நீதிமன்றத்தின் சட்டப்பூர்வமான உத்தரவாக உள்ள நிலையில் இது நிகழ்ந்துள்ளது.

தமது விடாமுயற்சிக்காக பாதிக்கப்பட்ட சாஹில் லோச்சபிற்கும், சத்தியாகிரகத்தின் வலிமையை நிரூபித்ததற்காக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும் பாராட்டுகள்.” என தெரிவித்துள்ளார்.

“எப்ஐஆர் பதிவு செய்ய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் 7 மணி நேரம் போராட வேண்டி உள்ளது” -  ப.சிதம்பரம்
மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு நோட்டீஸ்: மகாராஷ்டிர அரசு நடவடிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in