

புதுடெல்லி: கடந்த 2019-ல் மத்திய உள்துறை அமைச்சராக அமித் ஷா பொறுப்பேற்ற பிறகு 2026-ம் ஆண்டு மார்ச் 31-க்குள் நாட்டில் நக்சலைட்டுகள் பிரச்சினைக்கு முடிவு காணப்படும் என்று அறிவித்தார்.
இதையடுத்து தீவிரமாகக் களம் இறங்கிய மத்தியப் பாதுகாப்புப் படையினர், குறிப்பிடத் தக்க வெற்றியை பெற்றுள்ளனர். பல முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அமித் ஷா விரிவான பதில் அளித்துள்ளார்.
கடந்த 2019-ல் 61 மாவட்டங்களில் 245 காவல் நிலையங்களில் நக்சலைட் வன்முறைகள் பதிவாகின. இது 2024-ல் 42 மாவட்டங்களில் 151 காவல் நிலையங்களாக குறைந்தது. 2025-ல் 32 மாவட்டங்களில் 119 காவல் நிலையங்களில் நக்சலைட்டுகள் வன்முறை பதிவானது.
இந்த ஆண்டு ஜனவரியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் கொண்ட மாவட்டங்களும் அதன் காவல் நிலையங்களும் இரண்டு மாநிலங்களில் மட்டும் எனக் குறைந்தது. தற்போது, சத்தீஸ்கரில் 3 மாவட்டங்களில் 9 காவல் நிலையப் பகுதிகளிலும் ஜார்க்கண்டில் 2 மாவட்டங்களில் 2 காவல் நிலையப் பகுதிகளில் மட்டுமே நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ளது.
சரண் அடையும் நக்சல்களுக்கான மறுவாழ்வு கொள்கையும் பலன் அளிக்கிறது. சரணடையும் நக்சல்களில் உயர் பதவியில் இருந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும் மற்றவர்களுக்கு ரூ.2.5 லட்சம் வழங்கப்படுகிறது. இதுதவிர ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு வெகுமதி அளிக்கப்படுகிறது.
சரண் அடையும் நக்சல்களுக்கு 3 ஆண்டுகளுக்கு சுயதொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாதந்தோறும் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2019 முதல் 2026 ஜனவரி வரை 5,880 நக்சலைட்கள் சரண் அடைந்துள்ளனர். 7,409 நக்சலைட்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனவே அமைச்சர் அமித்ஷா அறிவித்த மார்ச் 31 காலக்கெடுவுக்கு முன்பாகவே நக்சலைட்கள் நடமாட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.