அசாம் வளர்ச்சியை சுட்டிக்காட்டி மேற்கு வங்கத்தில் வாக்கு சேகரிக்கும் பாஜக

அசாம் வளர்ச்சியை சுட்டிக்காட்டி மேற்கு வங்கத்தில் வாக்கு சேகரிக்கும் பாஜக
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்குவங்கத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 291 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணி கட்சியான பிஜிபிஎம்-க்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. பிரதான எதிர்க்கட்சியான பாஜக 294 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. மார்க்சிஸ்ட் தலைமையில் அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட்டணி அமைத்து 294 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும், ஹுமாயூன் கபீரின் ஏஜேயுபி கட்சியும் கூட்டணி அமைத்து ஓரணியாக போட்டியிடுகின்றன. மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சி 294 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. ஒட்டுமொத்தமாக மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. இதில் ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தின் குமார்கிராம் தொகுதியில் கடந்த தேர்தலில் பாஜக மூத்த தலைவர் மனோஜ் ஓரான் வெற்றி பெற்றார். வரும் தேர்தலிலும் பாஜக சார்பில் அவர் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த தொகுதி அசாம் மாநிலத்தை ஒட்டி அமைந்திருக்கிறது. பாஜக ஆட்சியில் அசாம் அபார வளர்ச்சி அடைந்திருப்பதை சுட்டிக் காட்டி மனோஜ் ஓரான் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: அசாமில் 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கு சட்டம், ஒழுங்கு மேம்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் அசாம் மக்கள் உயர் சிகிச்சைக்காக மேற்குவங்கத்துக்கு வருகை தந்தனர். தற்போது நிலைமை தலைகீழாக மாறி மேற்குவங்க மக்கள் உயர் சிகிச்சைக்காக அசாமின் குவாஹாட்டிக்கு செல்கின்றனர். மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் அசாம் போன்று அபாரமாக முன்னேற்றம் அடையும். இவ்வாறு மனோஜ் ஓரான் தெரிவித்தார்.

குமார்கிராமை சேர்ந்த சாஜல் சாஹா கூறும்போது, “ஒரு காலத்தில் அசாம் மக்கள் சிகிச்சைக்காக வடக்கு மேற்குவங்கம் பகுதிக்கு வந்தனர். தற்போது மேற்குவங்கத்தின் குமார்கிராம், கூச்பெஹர், அலிப்பூர்துவார் பகுதி மக்கள் சிகிச்சைக்காக அசாம் செல்கின்றனர்" என்று தெரிவித்தார். வியாபாரி வீரபத்ர சஹாராய் கூறும்போது, “வணிகரீதியாக அடிக்கடி அசாம் சென்று திரும்புகிறேன். ஒரு காலத்தில் அசாமில் இரவு நேரத்தில் நடமாட முடியாது. இப்போது நள்ளிரவில்கூட எந்த பயமும் இல்லாமல் பயணம் செய்ய முடிகிறது” என்று தெரிவித்தார்.

பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, "அசாம் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட்டிருக்கிறது. ஆனால் மேற்குவங்க தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இன்னமும் வறுமையில் வாடுகின்றனர்’’ என்றார்.

அசாம் வளர்ச்சியை சுட்டிக்காட்டி மேற்கு வங்கத்தில் வாக்கு சேகரிக்கும் பாஜக
“எங்கள் எதிரிகள் உங்கள் நிலத்தை பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்” - வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in