

டெஹ்ரான்: “நீங்கள் வளர்ச்சியையும் பாதுகாப்பையும் விரும்பினால், எங்கள் எதிரிகள் உங்கள் நிலங்களிலிருந்து போரை நடத்த அனுமதிக்காதீர்கள்” என்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் வளைகுடா நாடுகளுக்குக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "ஈரான் முன்கூட்டியே தாக்குதல்களை நடத்தாது என்று நாங்கள் பலமுறை கூறியுள்ளோம். ஆனால் எங்கள் உள்கட்டமைப்பு அல்லது பொருளாதார மையங்களை குறிவைத்தால், அதற்கு நாங்கள் வலுவாக பதிலடி கொடுப்போம்.
பிராந்திய நாடுகளுக்கு: நீங்கள் வளர்ச்சியையும் பாதுகாப்பையும் விரும்பினால், எங்கள் எதிரிகள் உங்கள் நிலங்களிலிருந்து போரை நடத்த அனுமதிக்காதீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் மறைந்திருந்த அமெரிக்க ராணுவத்தின் இரண்டு ரகசிய முகாம்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இந்த முகாம்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் இருந்ததாகவும், இந்தத் தாக்குதலில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், இது குறித்த அதிகாரபூர்வ தகவலை அமெரிக்கா இன்னும் வெளியிடவில்லை. மறுபுறம், ஈரானுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக, ஈரானின் 90 சதவீத கச்சா எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை தரைவழித் தாக்குதல் மூலம் கைப்பற்ற அமெரிக்கா ஆலோசித்து வருகிறது.
வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்தப் பதற்றம், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.