ஈரான் உச்ச தலைவரின் இறுதிச் சடங்கு: இந்தியா சார்பில் பிஹார் ஆளுநர், மத்திய இணை அமைச்சர் பங்கேற்பதாக தகவல்

ஈரான் உச்ச தலைவரின் இறுதிச் சடங்கு: இந்தியா சார்பில் பிஹார் ஆளுநர், மத்திய இணை அமைச்சர் பங்கேற்பதாக தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: மறைந்த ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில் இந்தியா சார்பில் பிஹார் ஆளுநர் சையத் அட்டா ஹஸ்னைன், வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா ஆகியோர் பங்கேற்பார்கள் என்று ஈரானிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஏஎன்ஐ வெளியிட்டுள்ள செய்தியில், மறைந்த ஈரானிய உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில் இந்தியா சார்பில் பிஹார் ஆளுநர் சையத் அட்டா ஹஸ்னைன், வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா ஆகியோர் பங்கேற்பார்கள். மேலும், இறுதிச் சடங்கில் பங்கேற்கும் இந்தியக் குழுவில் வெளியறவு அமைச்சக அதிகாரிகளும் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் மசூத் பெசெஷ்கியான் அழைப்பு விடுத்திருந்தார். இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சீனா, ரஷ்யா, கத்தார், பிரான்ஸ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் சார்பில், தங்கள் நாட்டின் தூதுக்குழு இறுதிச் சடங்கில் பங்கேற்கும் என்று பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்தார்.

கமேனியின் இறுதிச்சடங்குகள் தலைநகர் டெஹ்ரானில் ஜூலை 4-ம் தேதி தொடங்க உள்ளன. அவரது சொந்த ஊரான, வடகிழக்கு புனித நகரமான மஷாத்தில் ஜூலை 9-ம் தேதி உடல் நல்லடக்கம் செய்யப்படுவதுடன் இறுச்சடங்கு நிறைவடைகிறது.

இறுதிச் சடங்கு ஏற்பாடுகளில், ஜூலை 7-ம் தேதி தெஹ்ரானுக்கு தெற்கே உள்ள மற்றொரு புனித நகரமான கோமில் நடைபெறும் சடங்குகளும் அடங்கும். இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் சுமார் 2 கோடி பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து டெஹ்ரான் மீது கடந்த பிப்ரவரி 28-ம் தேதி வான்வழித் தாக்குதலை தொடங்கின. இந்த தாக்குதலின் முதல் நாளில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்டார். இஸ்லாமிய சட்டத்தின்படி இறந்தவர்களின் உடலை கூடிய விரைவில் அடக்கம் செய்ய வேண்டும் என்றாலும் போர் காலங்களில் இதற்கு விதிவிலக்குகள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் உச்ச தலைவரின் இறுதிச் சடங்கு: இந்தியா சார்பில் பிஹார் ஆளுநர், மத்திய இணை அமைச்சர் பங்கேற்பதாக தகவல்
கார்கே உள்பட 8 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in