

புதுடெல்லி: லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள போஜ்சாலாவின் சரஸ்வதி சிலையை கொண்டுவர ஏற்பாடு செய்யப்படும் என மத்தியப்பிரதேச முதல்வர் மோஜன் யாதவ் தெரிவித்துள்ளார்.
11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தார் நகரிலுள்ள போஜ்சாலா. இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் கீழ் உள்ளது. இதை முஸ்லிம்கள் மவுலானா கமலூத்தீன் மசூதி எனவும், இந்துக்கள் வாக் (சரஸ்வதி) தேவி கோயில் என்றும் கூறி வந்தனர்.
இந்த பிரச்சினை பல்வேறு வழக்குகளாகி, ம.பி மாநிலத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டிருந்தது. இதன் மீதான உச்ச நீதிமன்ற வழக்கில் ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, ம.பி உயர் நீதிமன்றத்தின் இந்தோர் அமர்வு அனைத்து மனுக்களையும் விசாரித்தது. நேற்று வெளியான இதன் தீர்ப்பில் போஜ்சாலா ஒரு வாக் தேவி கோயிலே எனவும், முஸ்லிம்கள் நடத்தி வரும் தொழுகை அங்கு நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள வாக் தேவி சிலையை கொண்டுவந்து போஜ்சாலாவில் நிறுவப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவிறுத்தி இருந்தது. இதன் மீது கருத்து கூறிய பாஜக ஆளும் ம.பி முதல்வர் மோஹன் யாதவ், வாக் தேவி சிலையை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ம.பி முதல்வர் மோஜன் யாதவ் கூறுகையில், “மன்னர் போஜ், வாக் தேவியின் (சரஸ்வதி) திருவுருவத்தின் மூலம் இவ்விடத்தின் முக்கியத்துவத்தை நிலைநாட்டினார். இதை நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.
எனவே, போஜ்சாலாவின் பெருமையை மீட்டெடுக்கும் வகையில், வெளிநாட்டிலிருந்து வாக்தேவி சிலையைத் திரும்பக் கொண்டுவருவதற்கான சட்டரீதியான ஏற்பாடுகள் செய்யப்படும்.
ம.பி முதல்வர் மோஜன் யாதவ்
அயோத்தி கோயில் மீதான நீதிமன்றத் தீர்ப்பு, சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த முன்னுதாரணம் அமைந்தது. அந்த மரபைப் பின்பற்றி, போஜ்சாலா தீர்ப்பையும் ஏற்பதன் மூலம் மத்தியப் பிரதேசம் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும்.” எனத் தெரிவித்தார்.
இந்த தீர்ப்பின் மீது பாஜகவின் தோழமை அமைப்பான விஷ்வ இந்து பரிஷத்தின் சர்வதேசத் தலைவர் அலோக் குமார், ‘போஜ்சாலா மீதான இந்தத் தீர்ப்பு, இந்தியாவின் கலாச்சார உணர்வு, உண்மை மற்றும் சனாதன மரபு ஆகியவற்றிற்கு அளிக்கப்பட்ட ஒரு முக்கிய அங்கீகாரம்.
இந்தத் தீர்ப்பானது முறையான நீதித்துறை செயல்முறைகளைப் பின்பற்றியே வெளியாகி உள்ளது. இந்த போஜ்சாலா என்பது சரஸ்வதி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழமையான கோவில் எனவும், சமஸ்கிருத கல்விக்கான மையமாகவும் திகழ்ந்தது என்றும் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.
இதற்கான அடிப்படை, அதன் மீதான வரலாற்று ஆவணங்கள், தொல்லியல் சான்றுகள் மற்றும் அங்கு தொடர்ந்து நடைபெற்று வந்த இந்து வழிபாட்டு மரபு ஆகியவை. எனவே, பொதுமக்கள் இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.” எனக் கூறி உள்ளார்.
இவ்வழக்கில் இந்து தரப்பிலான முக்கிய மனுதாரரான ஆஷிஷ் கோயல், ’வரலாற்றுச் சூழல்களின் காரணமாகவே போஜ்சாலாவில் தொழுகை நடத்தும் வழக்கம் உருவானது. இந்த உண்மையை நிலைநாட்டுவதற்காகத் தானும் தனது முன்னோர்களும் நீண்ட காலமாகப் போராடி வந்தோம்.” எனக் குறிப்பிட்டார். இந்த வழக்கில் ம.பி.யின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் கூறுகையில், “போஜ்சாலா என்பது இந்தியத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ள ஒரு வரலாற்றுச் சின்னம்.
அத்தகைய வரலாற்றுச் சின்னத்திற்குள் இந்து முறைப்படி பூஜையோ அல்லது இஸ்லாமிய முறைப்படி தொழுகையோ நடத்த அனுமதிக்கப்படுமா? என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கே உண்டு.
வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி, சம்பலில் உள்ள ஷாஹி ஜாமா மசூதி மற்றும் மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமி - ஷாஹி ஈத்கா ஆகிய இடங்கள் தொடர்பான வழக்குகள் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.” என அவர் குறிப்பிட்டார்.
வாக் தேவி சிலையின் விவரம்:
இந்தூர் நீதிமன்ற விசாரணையின் போது, 1875 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் அரசின் அரசியல் பிரதிநிதியான மேஜர் ஜெனரல் வில்லியம் கைக், அக்கோவில் வளாகத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டார் என்பது தெரியவந்தது.
இந்த அகழ்வாராய்ச்சியில் அங்கு புதைக்கப்பட்டிருந்த வாக்தேவி அம்மனின் சிலை கண்டெடுக்கப்பட்டது. இச்சிலையை 1903 இல், கர்சன் பிரபு தன்னுடன் எடுத்துச் சென்று, லண்டனில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் வைத்தார்.
அன்று முதல் அந்த சிலை அங்கேயே இருந்து வருகிறது. வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, நான்கு கரங்களைக் கொண்டிருக்கும் அச்சிலையின் கிரீடமும், நேர்த்தியாக அமைக்கப்பட்ட சிகை அலங்காரமும் அதன் தெய்வீகத்தையும் மாண்பையும் பிரதிபலிக்கின்றன.
அச்சிலையின் அடிப்பாகத்தில் சமஸ்கிருத மொழியிலும் தேவநாகரி எழுத்துருவிலும் பொறிக்கப்பட்டுள்ள ஒரு கல்வெட்டு உள்ளது. இதில், வரருச்சி எனும் அறிஞர், வாக்தேவி அம்மன் சிலை உட்பட மூன்று சிலைகளைச் செதுக்குமாறு பணித்திருந்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது லண்டன் அருங்காட்சியகத்தினுள் உள்ள இச்சிலை ஏறத்தாழ 128.5 செ.மீ உயரமும், 58.6 செ.மீ அகலமும் கொண்டது. இதன் எடை சுமார் 250 கிலோ இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.