உ.பி. முழுவதும் அறிமுகமாகும் ‘பாரத் டாக்ஸி’ போக்குவரத்து - முதல்வர் யோகி நடவடிக்கை

உ.பி. முழுவதும் அறிமுகமாகும் ‘பாரத் டாக்ஸி’ போக்குவரத்து - முதல்வர் யோகி நடவடிக்கை
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் ‘பாரத் டாக்ஸி’ எனும் கூட்டுறவு வாடகைப் போக்குவரத்து மாநிலத்தில் மொத்தமுள்ள 75 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. இதற்கான உத்தரவை முதல்வர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்துள்ளார்.

‘பாரத் டாக்ஸி’ எனும் கூட்டுறவு வாடகைப் போக்குவரத்து, உ.பி.-யின் முக்கிய சில நகரங்களில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் வெற்றியை அடுத்து, இவற்றை கிராமப்புறங்களுக்கும் கொண்டு செல்ல உ.பி. அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், உ.பி. முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் இருசக்கர மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோ-ரிக்ஷாக்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பொதுமக்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன.

இதன் மூலம் பயணிகளுக்கு உள்ளூர் போக்குவரத்தில் பல்வேறு தேர்வுகள் கிடைக்கும். ‘உபேர்’ போன்ற வாடகைப் போக்குவரத்தைப் போல் இல்லாமல், ‘பாரத் டாக்ஸி’ திட்டத்தில் எவருக்கும் கமிஷன் தரத் தேவையில்லை.

அதேபோல், அதிக தேவை உள்ள முக்கிய நேரங்களிலும் பொதுமக்களுக்கு கூடுதல் கட்டணங்கள் இருக்காது. மாறாக, ஒரே வகையான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.

‘பாரத் டாக்ஸி’ திட்டத்தில், 'சாரதிகள்' என்று அழைக்கப்படும் ஓட்டுநர்கள், ஒரு கூட்டுறவு அமைப்பு மூலம் இத்தொழிலுடன் இணைக்கப்படுகிறார்கள். ஓட்டுநர்களின் வருமானத்தை மேம்படுத்தும் வகையில் உ.பி. அரசால் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பூஜ்ஜிய கமிஷன் முறை என்பதால், ஒவ்வொரு பயணத்துக்கும் ஓட்டுநர்களிடமிருந்து வழக்கமாகப் பிடிக்கப்படும் கமிஷன் கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது. மாறாக, கூட்டுறவு கட்டமைப்பின் மூலம் ஓட்டுநர்களுக்கு இத்தொழிலில் ஒரு பங்கு வழங்கப்படுகிறது.

இதன் காரணமாக ஓட்டுநர்கள் வெறும் சேவை வழங்குநர்களாக மட்டுமில்லாமல், தொழிலின் பங்கேற்பாளர்களாகவும் மாறும் வாய்ப்பு கிடைக்கிறது. சிறிய நகரங்களில் வசிப்பவர்களுக்கும், மாவட்டத்திற்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயுமான பயணங்களுக்கு முறைப்படுத்தப்பட்ட டாக்ஸி சேவையை இத்திட்டம் அளிக்கிறது.

ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள், சந்தைகள் மற்றும் பிற முக்கிய இடங்களுக்குச் செல்லும் மக்களுக்கு இச்சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிராமப்புறங்களில் ‘பாரத் டாக்ஸி’-யை விரிவுபடுத்த தொடக்க வேளாண் கடன் சங்கங்களை பயன்படுத்தவும் உ.பி. அரசு திட்டமிட்டுள்ளது. இது, மாவட்டத் தலைமையகம், மருத்துவமனைகள், சந்தைகள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்குச் செல்லும் கிராம மக்களுக்குப் புதிய உள்ளூர் போக்குவரத்து வசதிகளை உருவாக்கும். இது, கிராமப்புறங்களில் உள்ளூர் சுயவேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் எனக் கருதப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in