

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தின் இமயமலை பகுதியில் 10,279 அடி உயரத்தில் பத்ரிநாத் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் இந்த கோயில் நடை திறந்திருக்கும். ஓராண்டில் சுமார் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருகின்றனர்.
பத்ரிநாத் கோயிலின் காணிக்கை பணம் திருடப்படுவதாக பைரவ் சேனா சங்கம் சார்பில் காவல் துறையில் ரகசியமாக புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் கடந்த ஜூன் 25-ம் தேதி பத்ரிநாத் கோயிலின் காணிக்கை எண்ணும் பணி சிசிடிவி கேமராக்கள் மூலம் ரகசியமாக கண்காணிக்கப்பட்டது. அப்போது கோயில் ஊழியர் பிரமோத் நவுடியால் காணிக்கை பணத்தை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பிரமோத் நவுடியாலை கடந்த 12-ம் தேதி சிறப்புக் குழுவினர் கைது செய்தனர். அவருடன் இணைந்து செயல்பட்ட கோயில் முன்னாள் அதிகாரி ராஜேந்திர சவுகான் நேற்று கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழு வட்டாரங்கள் கூறும்போது, ‘‘இந்த வழக்கில் இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் சில ஊழியர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அவர்கள் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவர்களும் கைது செய் யப்படுவார்கள்’’ என்று தெரிவித்துள்ளன.