

அவினாஷ் சுக்லா
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் அவினாஷ் சுக்லாவும் ஒருவர். சிறப்பு புலனாய்வு போலீஸார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: உத்தர பிரதேசம் மகேஷ்கஞ்ச் அருகே உள்ள பாபுபூர் நாரியாவா கிராமத்தை சேர்ந்த அவினாஷ் சுக்லா, ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இவர் காணிக்கை எண்ணும் பிரிவில் பகுதிநேரமாக பணியாற்றி உள்ளார். திருடிய காணிக்கை பணத்தில் இருந்து தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ரூ.19 லட்சத்தை வழங்கி உள்ளார். தனது அண்ணன் திருமணத்துக்கு அவர் ரூ.6 லட்சத்தை அன்பளிப்பாக வழங்கியிருக்கிறார்.
தனது காதலிக்கு அண்மையில் அவர் ஐ போன் வாங்கிக் கொடுத்துள்ளார். அத்துடன் அன்பளிப்பாக ரூ.2.5 லட்சத்தை வழங்கியிருக்கிறார். வங்கிக் கணக்குகள் மூலமாக பணம் கைமாறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அயோத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் பல்வேறு சொத்துகளை வாங்கியிருக்கிறார். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். அவர் புதிதாக ஒரு கார் வாங்கி உள்ளார்.
அவரிடம் இருந்து ரூ.20.39 லட்சம் ரொக்கம், ரூ.1.06 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர் மற்றும் தங்கம், வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்திருக்கிறோம். மேலும் அவினாஷ் சுக்லா, தனது சொந்த கிராமமான பாபுபூர் நாரியாவாவில் காணிக்கை திருட்டு பணத்தில் பிரம்மாண்ட வீட்டை கட்டி உள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.