

சென்னை: முதல்வர் விஜய் கரூர் செல்ல தடை விதிக்கக் கோரி திமுக தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற அனுமதி அளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்நிலையில், வரும் 10-ம் தேதி கரூர் செல்லும் முதல்வர் விஜய், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார். அப்போது, தவெக சார்பில் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கவுள்ளார்.
இதற்கிடையில், கரூர் சம்பவம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், “ஜூலை 10-ம் தேதி கரூர் செல்லும் முதல்வர் விஜய், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலைக்கான உத்தரவு மற்றும் கருணைத் தொகை வழங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதல்வர் விஜய் கரூர் செல்வது, சிபிஐ விசாரணையைப் பாதிக்கும். இந்த வழக்கு விசாரணை முடியும் வரை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பொதுவெளியில் கருத்து தெரிவிக்க தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன், அலோக் ஆராதே அமர்வு முன்னிலையில் நேற்று வந்தது. திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் ஆஜராகி, கரூர் வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில், தமிழக அமைச்சர்கள் பொதுவெளியில் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறுவதாகும். அவர்கள் மீது சிபிஐ விசாரனைக்கு உத்தரவிட வேண்டும். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முதல்வர் விஜய் உள்ளிட்டோர் நிவாரணம் வழங்குதல் போன்ற விஷயங்களை வெளிப்படையாகவே செய்கின்றனர். வழக்கில் சாட்சிகளும், ஆதாரங்களும் பாதிக்காமல் இருக்கும் வகையிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் நலத்திட்டங்களை சிபிஐயிடம் தாக்கல் செய்துவிட்டு, உச்ச நீதிமன்றம் வகுக்கும் விதிகளின்படியும் வழங்க உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார்.
முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நீரஜ் கிஷன் கவுல், “கரூர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தற்போது அமைச்சர்களாக உள்ளனர். முதல்வர் குற்றம் சாட்டப்பட்டவராக இல்லை’’ என்று வாதிட்டார்.
அப்போது, திமுக வழக்கறிஞரைப் பார்த்து நீதிபதிகள், “கருத்துரிமைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க வேண்டுமா? கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுங்கள். ஒரு முதல்வரின் செயல்பாட்டுக்கு உச்ச நீதிமன்றம் எப்படி கட்டுப்பாடுகள் விதிக்க முடியும். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட வழக்கில், எதிர்க்கட்சியின் மனுவை ஏற்று உத்தரவுக்கு மேல் உத்தரவை எப்படி உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும். கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கருணைத் தொகை வழங்குவது எப்படி விசாரணையை பாதிக்கும்.
கரூர் தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் (எப்ஐஆர்) விஜய் பெயர் இல்லை. இந்த விவரத்தை சரி பாருங்கள். உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான கண்காணிப்பு குழுவிடம் முறையிடுங்கள். நீதிமன்ற உத்தரவை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும். உங்களது அரசியல் சார்ந்த சண்டைகளை நீதிமன்றத்துக்கு வெளியே வைத்து கொள்ளுங்கள். இப்போது இந்த மனுவை வாபஸ் பெறுகிறீர்களா அல்லது தள்ளுபடி செய்யலாமா?” என்று தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாகத் திமுக வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை வாபஸ் பெற அனுமதித்து விசாரணையை முடித்து வைத்தனர்.
இதையடுத்து முதல்வர் விஜய் 10-ம் தேதி கரூர் செல்வதிலோ அல்லது நிகழ்ச்சிகளிலோ பங்கேற்க எந்தத் தடையும் இல்லை.