

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் நன்கொடை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நீதி விசாரணை நடத்தப்படவேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர்கள் அளிக்கும் நன்கொடை, காணிக்கை பணம் திருடப்படுவதாக புகார்கள் எழுந்தன. சுமார் ரூ.200 கோடி வரை மோசடி செய்யப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்க விசாரிக்க கடந்த ஜூன் 15-ம் தேதி சிறப்பு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது.
இந்நிலையில் ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 8 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நன்கொடை கையாடல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த பிறகு, அயோத்தி ராமர் கோயிலில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பலமுறை சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஜய் உபாத்யாய் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நம்பிக்கை என்ற பெயரில் அயோத்தி ராமர் கோயிலில் கொள்ளை நடந்துள்ளது. இப்பிரச்சனை நிதி சார்ந்ததாக மட்டுமல்லாமல், பக்தர்களின் உணர்வுகளோடு தொடர்புடையது.
ஸ்ரீ ராமரின் பெயரில் திரட்டப்பட்ட நிதியானது பாஜக - ஆர்எஸ்எஸ் அமைப்பினரால் அரசியல் ரீதியான கொள்ளைக்கு ஒரு வழியாக மாறியுள்ளது. இது வெறும் நிதி மோசடி மட்டுமல்ல, கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை மற்றும் உணர்வுகளுக்கு இழைக்கப்பட்ட பெரும் துரோகம். பிரதமரின் மேற்பார்வையில் கோயில் விவகாரங்களைக் கண்காணிக்க ஒரு அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. இப்போது இந்த மோசடிக் குற்றச்சாட்டுக்கு யார் பொறுப்பேற்பார்கள்?
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றக் கண்காணிப்பில் நீதி விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.