“பாஜகவின் பதவி வெறி அம்பலம்...” - அரவிந்த் கேஜ்ரிவால் மனைவி சுனிதா ரியாக்‌ஷன்

“பாஜகவின் பதவி வெறி அம்பலம்...” - அரவிந்த் கேஜ்ரிவால் மனைவி சுனிதா ரியாக்‌ஷன்
Updated on
2 min read

புதுடெல்லி: ஊழல் வழக்கில் இருந்து அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், “இன்று கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அரவிந்த் தனது வாழ்க்கையை நேர்மையுடன் வாழ்ந்துள்ளார்” என்று அவரது மனைவி சுனிதா கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும், இந்தத் தீர்ப்பின் மூலம் பாஜகவின் பதவி வெறி அம்பலமாகிவிட்டது என்று அவர் ஆவேசமாக கூறினார்.

டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கேஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் கல்வி அமைச்சராக இருந்த மணிஷ் சிசோடியா உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த இந்த வழக்கு, டெல்லி நீதிமன்றத்தால் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

தீர்ப்பை முன்னிட்டு நீதிமன்றத்தில் ஆஜரான அரவிந்த் கேஜ்ரிவால் பின்னர் இல்லம் திரும்பினார். அப்போது அவர் மீது பூக்கள் தூவி அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தார் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். மேலும், தனது கணவரை ஆரத்தழுவி சுனிதா கேஜ்ரிவால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுனிதா கேஜ்ரிவால், ‘‘இன்று கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அரவிந்த் தனது வாழ்க்கையை நேர்மையுடன் வாழ்ந்துள்ளார். ஆனால், அவர்கள் (பாஜக) அரவிந்த் கேஜ்ரிவாலையும், அவரது நண்பர்களையும் சிறைக்கு அனுப்பினர். அவர்களின் பதவி வெறி அம்பலமாகிவிட்டது. உண்மை வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. எங்களுக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்’’ என்று தெரிவித்தார்.

மேலும், அவர் தனது எக்ஸ் பதிவில், ‘‘இந்த உலகில் ஒருவர் எவ்வளவு சக்தி படைத்தவராக மாறினாலும், அவரால் சிவனின் சக்தியை விஞ்ச முடியாது. உண்மை எப்போதும் வெல்லும்’’ என்று சுனிதா கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், ‘‘நான் ஊழல்வாதி அல்ல. கேஜ்ரிவாலும் மணீஷ் சிசோடியாவும் முற்றிலும் நேர்மையானவர்கள் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இன்று இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் நீதிமன்றம் விடுவித்துள்ளது. உண்மை வெல்லும் என்று நாங்கள் எப்போதும் கூறி வந்தோம். இந்திய சட்ட அமைப்பின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.

அமித் ஷாவும் மோடியும் சேர்ந்து ஆம் ஆத்மி கட்சியை ஒழித்துக்கட்ட மிகப் பெரிய சதித் திட்டத்தை தீட்டினார்கள். ஆம் ஆத்மி கட்சியின் 5 பெரிய தலைவர்களை சிறையில் அடைத்தார்கள். முதல்வர் பதவியில் இருந்த ஒருவர், வீட்டில் இருந்து வெளியே இழுத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒவ்வொரு செய்தி சேனலிலும் நாங்கள் ஊழல்வாதிகள் என்று அழைக்கப்பட்டோம். கேஜ்ரிவால் ஊழல்வாதி அல்ல. நான் என் வாழ்க்கையில் நேர்மையை மட்டுமே சம்பாதித்துள்ளேன். இன்று, கேஜ்ரிவாலும், மணீஷ் சிசோடியாவும், ஆம் ஆத்மி கட்சியும் நேர்மையானவர்கள் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

நமது அரசியலமைப்புச் சட்டத்தையும், அத்தகைய ஒரு அரசியலமைப்பை நமக்கு வழங்கிய பி.ஆர். அம்பேத்கரையும் நினைத்து நாங்கள் மீண்டும் பெருமைப்படுகிறோம். உண்மை மீண்டும் வென்றுள்ளது’’ என தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது கேஜ்ரிவால் பேச முடியாமல் நா தழுதழுக்க அழுதார். அருகில் இருந்த மணீஷ் சிசோடியா அவரை ஆறுதல்படுத்தினார்.

வழக்கின் பின்னணி: டெல்லியில் முந்தைய ஆம் ஆத்மி கட்சி ஆட்சியின்போது அரசு அறிமுகம் செய்த புதிய மதுபான கொள்கையில் (2022) முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்தது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர்.

சிபிஐ விசாரித்த வழக்கில் இருந்து அவர்கள் இருவரும் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். சுமார் நூறு கோடி ரூபாய் முறைகேடு நடந்து இருப்பதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் வாதங்கள் முடிந்த நிலையில், டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் கேஜ்ரிவால், சிசோடியா மற்றும் இதில் தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட 21 பேரை விடுவித்தது. இந்தத் தீர்ப்பு டெல்லி அரசியல் வட்டாரத்தில் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது.

“பாஜகவின் பதவி வெறி அம்பலம்...” - அரவிந்த் கேஜ்ரிவால் மனைவி சுனிதா ரியாக்‌ஷன்
“தமிழக சட்டப்பேரவை தேர்தல் வெளிப்படையாக, நேர்மையாக நடத்தப்படும்” - தலைமை தேர்தல் ஆணையர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in