சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடத்தப்படும். புதிய முயற்சியாக, ecinet App-ல் வாக்குப்பதிவு விவரங்கள் பதிவு செய்யப்படும். யார் வேண்டுமானாலும் இந்த App-ஐ டவுன்லோடு செய்து தரவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். தேர்தல் தினத்தன்று மட்டுமல்ல, வாக்கு எண்ணிக்கையின்போதும் முடிவுகளை உடனுக்குடன் இந்த App மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடக்க உள்ளதை முன்னிட்டு, தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்கான பணிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழுவினர் சென்னையில் நேற்றும் இன்றும் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வுப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, ஞானேஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜனநாயகத்தின் தாயாகவும், உலகின் மிகப் பெரிய ஜனநாயகமாகவும் திகழும் நாடு இந்தியா. உலகில், வெளிப்படையான நேர்மையான தேர்தலை நடத்தும் அமைப்பாக இந்திய தேர்தல் ஆணையம் உள்ளது.
விரைவில் தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் திருவிழா; தமிழ்நாட்டின் பெருவிழா. எனவே, தமிழக வாக்காளர்கள் அனைவரும் இந்த திருவிழாவில் பங்கேற்க வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கிறேன்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஜனநாயக நடைமுறையை கொண்டிருந்தது தமிழ்நாடு. இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் சர்வதேச மாநாடு ஒன்றை நடத்தியது. அதில் 72 நாடுகள் கலந்து கொண்டன. பல்வேறு நாடுகளின் தலைமைத் தேர்தல் ஆணையர்கள், தேர்தல் ஆணையர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் அதில் கலந்து கொண்டனர். அப்போது நாங்கள், தமிழகத்தில் 10-ம் நூற்றாண்டில் நடைமுறையில் இருந்த குடவோலை முறை குறித்து உலகுக்கு தெரிவித்தோம். தமிழகத்தில் தொன்மையான ஜனநாயக மதிப்பீடுகள் இருந்ததை எண்ணி, உலக நாடுகள் மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் பகிர்ந்து கொண்டன.
கடந்த இரண்டு நாட்களாக நாங்கள் தேர்தல் தயாரிப்பு குறித்து ஆய்வு செய்தோம். மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், டிஜிபி, தலைமை செயலர் உள்ளிட்டோருடன் இணைந்து நாங்கள் இந்த ஆய்வை மேற்கொண்டோம்.
தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 188 பொதுத் தொகுதிகள், 44 எஸ்.சி. தொகுதிகள், 2 எஸ்டி தொகுதிகள். தேர்தல் சிறப்பாக நடைபெற வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்துவது மிகவும் முக்கியம். இதற்காகவே, தமிழகத்தில் அக். 27, 2025 முதல் பிப். 23, 2026 வரை சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தகுதியான வாக்காளர்கள் யாரும் விடுபட்டு விடக்கூடாது என்பதையும், தகுதி பெறாதவர்கள் யாரும் இடம்பெற்றுவிடக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் இந்திய தேர்தல் ஆணையம் நன்றி தெரிவிக்கிறது; நாடு நன்றி தெரிவிக்கிறது.
தற்போது தமிழகத்தில் 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 வாக்காளர்கள் உள்ளனர். இறந்த வாக்காளர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் பெயர்களைக் கொண்ட வாக்காளர்கள் ஆகியோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.
சுமார் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளுடன் தமிழகம் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. இதில், 44 ஆயிரம் வாக்குச்சாவடிகள் கிராமப்புறங்களில் இருக்கும். வாக்குப்பதிவு 100% நேரலையாக கண்காணிக்கப்படும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும். வாக்காளர்கள் எளிதாக வாக்களிக்க வசதியாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சராசரியாக 756 வாக்காளர்கள் இடம்பெறும் வகையில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில், பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் வாக்குச்சாவடிகள் 258 ஆகவும், மாற்றுத்திறனாளிகள் நிர்வகிக்கும் வாக்குச்சாவடிகள் 47 ஆகவும், அனைத்து வசதிகளும் கொண்ட மாதிரி வாக்குச்சாவடிகள் 265 ஆகவும் இருக்கும்.
தமிழகத்தில் பெண் வாக்காளர்கள்தான் அதிகம். 2.89 கோடி பெண் வாக்காளர்களும், 2.77 கோடி ஆண் வாக்காளர்களும் இருக்கிறார்கள். மூன்றாம் பாலின வாக்காளர்கள் 7,617 பேர் இருக்கிறார்கள். 85 வயதைக் கடந்த மூத்த வாக்காளர்கள் 8 லட்சமும், 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் 2,530 பேரும் இருக்கிறார்கள்.
இளம் வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கல்லூரிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிப்பதற்கு ஏற்ப ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வசதிகள் செய்யப்படும். புதிய முயற்சிகளில் ஒன்றாக, வாக்குச்சாவடி அறைக்குச் செல்லும் முன் மொபைல் போன்களை ஒப்படைப்பதற்கான மொபைல் போன்கள் சேகரிப்பு மையம் அமைக்கப்படும். வாக்களித்து விட்டு திரும்பி வந்த பிறகு அதை பெற்றுக்கொள்ள முடியும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளர்களின் புகைப்படங்கள் வண்ணத்திலும் பெரியதாகவும் இருக்கும். அவர்களின் பெயர்களும் பெரிய எழுத்துக்களாக இருக்கும். வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை தெரிந்து கொள்வதை மேலும் எளிதாக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட இருக்கிறது.
மற்றுமொரு புதிய முயற்சியாக, ecinet App-ல் வாக்குப்பதிவு விவரங்கள் பதிவு செய்யப்படும். யார் வேண்டுமானாலும் இந்த App-ஐ டவுன்லோடு செய்து தரவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். தேர்தல் தினத்தன்று மட்டுமல்ல, வாக்கு எண்ணிக்கையின்போதும் முடிவுகளை உடனுக்குடன் இந்த App மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும், நேர்மையானதாகவும், வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை தரக்கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உறுதிபூண்ள்ளது. இவ்வாறு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தார்.
மேலும், பத்திரிகையாளர்களுக்கு தபால் வாக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செய்தியாளர்கள் கோரிக்கை வைத்ததற்கு, ‘அதுகுறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும்’ என்று கூறினார்.