

தெலங்கானா அரசு அதிகாரி வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையில் சிக்கிய பணம்
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நிலம் மற்றும் சர்வே துறை இணை இயக்குநராக பணியாற்றி வந்தவர் எஸ்.நரஹரி. இவர் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துகளை குவித்துள்ளதாக புகார் எழுந்தது.
இதன் அடிப்படையில் ஹைதராபாத்தில் அவர் வசிக்கும் வீடு, அலுவலகம் மற்றும் நண்பர்கள், உறவினர்களின் வீடுகள் என மொத்தம் 11 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ஸ்ரீதர் கூறுகையில், ‘‘நரஹரி வீட்டின் படுக்கை அறையில் மெத்தைக்கடியில் ரூ.32 லட்சமும், பீரோவின் மேல் பகுதியில் கட்டுக்கட்டாக பணமும் சிக்கியது. மேலும் இந்த சோதனையில் ரூ.1 கோடிக்கு வங்கி டெபாசிட், வீடு, நிலப் பத்திரங்கள், 1 கிலோ தங்கமும் சிக்கின.
ரூ.1.54 கோடி பணம் ஆங்காங்கே பத்திரப்படுத்தப்பட்டு இருந்தது. மேலும் 2 வங்கி லாக்கர்களை திறந்து சோதனையிட அனுமதி கோரப்பட்டுள்ளது. நரஹரியை கைது செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.