

ஸ்ரீகாகுளம்: ‘‘நம்முடைய பிள்ளைகளே நமது சொத்து. 3-வது குழந்தை பெற்றால் ரூ.30 ஆயிரம், 4-வது குழந்தை பெற்றுக் கொண்டால் ரூ.40 ஆயிரம் அரசு சார்பில் வழங்கப்படும்’’ என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று அறிவித்தார்.
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் நேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் நரசண்ண பேட்டையில் ‘தூய்மை ஆந்திரா - தங்க ஆந்திரா’ எனும் திட்டத்தில் பங்கேற்றார்.
இதில் சந்திரபாபு நாயுடு பேசுகையில், ‘‘ஏழ்மை இல்லா சமூகத்தை காண வேண்டும் என்பதே ஆசை. இந்த சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வந்தால்தான் அது சாத்தியம். அதற்கு பொருளாதாரம் இடம் கொடுக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கு முதலீடு என்பது அவசியம். அந்த முதலீட்டை நம்மிடம் வைக்க தொழில் நிறுவனங்கள் வர வேண்டும். அப்போதுதான் ஒரு மாநிலத்தின் வளர்ச்சி பெருமடங்கு உயரும். இப்போது ஆந்திராவில் தொழில் தொடங்க கூகுள் உட்பட பல நிறுவனங்கள் முன் வருகின்றன. தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி ஆட்சியில், கடந்த 23 மாதங்களில் மட்டும் ஆந்திராவில் ரூ. 23 லட்சம் கோடி முதலீடுகள் வந்துள்ளன. ஆந்திர அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, 24 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இதன் மூலம் நமது அடுத்த தலைமுறை நன்றாக சம்பாதித்து வளமான வாழ்க்கையை வாழ்வார்கள். இனி வட ஆந்திராவில் இருந்து பிழைப்பு தேடி வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. பல நிறுவனங்கள் தொழில் தொடங்க வட ஆந்திராவை நோக்கி படை எடுக்கின்றன.
சொத்து: பிள்ளைகள்தான் நமது சொத்துக்கள் என அந்த காலத்தில் நம் முன்னோர் சொன்னார்கள். ஆனால், நாம் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகளுடன் நிறுத்தி விட்டோம். இப்போது நான் சொல்கிறேன். பிள்ளைகள்தான் நமது சொத்து. ஆதலால், பிள்ளைகளை வளர்க்க பயப்பட வேண்டாம்.
3-ம் குழந்தை பெற்றால், ரூ.30 ஆயிரம், 4-வது குழந்தை பெற்றுக் கொண்டால் ரூ.40 ஆயிரம் அரசு சார்பில் வழங்குவேன். ஏற்கெனவே ‘தாய்க்கு வந்தனம்’ எனும் திட்டத்தின் கீழ் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையை மேலும் அதிகரிக்க வேண்டும் எனும் யோசனையும் எனக்கு உள்ளது. இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.