“ஆனைமங்கல செப்பேடுகள் சோழர்களின் பெருமையை பறைசாற்றுகின்றன” - பிரதமர் மோடி பெருமிதம்

“ஆனைமங்கல செப்பேடுகள் சோழர்களின் பெருமையை பறைசாற்றுகின்றன” - பிரதமர் மோடி பெருமிதம்
Updated on
1 min read

ஹேக் [நெதர்லாந்து]: நெதர்லாந்திலிருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க ஆனைமங்கல செப்பேடுகள் வெற்றிகரமாக மீட்கப்பட்டதை அடுத்து, ‘இந்த செப்பேடுகள் சோழர்களின் பெருமையை பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்” என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமையன்று நெதர்லாந்தின் ஹேக் நகரில் நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டன் ஆகியோர் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக சோழர்கால ஆனைமங்கலம் செப்பேடுகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இந்தியர்கள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம். 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் உடன் இணைந்து பங்கேற்றேன்.

சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள் உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.

நெதர்லாந்தில் லெய்டன் செப்பேடுகள் என்றும், இந்தியாவில் ஆனைமங்கலம் செப்பேடுகள் என்றும் அறியப்படும் இந்தப் பழங்கால செப்பேடுகளை மீட்டுக் கொண்டு வர, மத்திய அரசு 2012-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து முயற்சி செய்து வந்தது. சுமார் 30 கிலோகிராம் எடையுள்ள இந்த செப்பேடுகள், சோழப் பேரரசின் அதிகாரப்பூர்வ அரச முத்திரையைக் கொண்ட ஒரு பிரம்மாண்டமான வெண்கல வளையத்தால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டுள்ளன.

நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செப்பேடுகள், சோழர் கால அரசாட்சியின் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு சான்றாக விளங்குகின்றன. ஒரு புத்த மடாலயத்தைப் பராமரிப்பதற்காக முதலாம் ராஜராஜ சோழன் அறக்கொடைகளை அளித்த தகவல்கள் இந்த செப்பேடுகளில் இடம்பெற்றுள்ளன.

“ஆனைமங்கல செப்பேடுகள் சோழர்களின் பெருமையை பறைசாற்றுகின்றன” - பிரதமர் மோடி பெருமிதம்
“அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் சிபிஐ வழக்கு பாயும்” - தவெகவுக்கு டிடிவி எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in