

காந்திநகர்: நாட்டிலேயே முதல் முறையாக மத்திய கூட்டுறவு அமைச்சகத்தின் கீழ் டெல்லியில் பாரத் டாக்ஸி சேவை அறிமுகம் செய்யப்பட்டது.
சவாரி அழைப்பு செயலியான இது ஓலா, உபெர் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கு சவால் விடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், குஜராத் மாநிலம் காந்திநகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரத் டாக்ஸியை மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
தற்போது சந்தையிலுள்ள தனியார் சவாரி அழைப்பு நிறுவனங்கள், தங்களது தொழிலாளர்களைத் திட்டமிட்டு சுரண்டுகின்றன. கார்ப்பரேட் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் வகையில், 'அமுல்' பால் கூட்டுறவு மாதிரியின் அடிப்படையில் ஒரு கூட்டுறவு கட்டமைப்பை அரசு ஏற்படுத்தியுள்ளது.
இந்த புதிய மாற்று வழிமுறையானது, வாடிக்கையாளரோ அல்லது சேவை வழங்குநரோ (ஓட்டுநரோ) எந்தவொரு சுரண்டலையும் எதிர்கொள்ளாத ஒரு நியாயமான அமைப்பை உறுதி செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.