

குவாடலஜாரா: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மெக்சிகோவின் குவாடலஜாரா நகரில் உள்ள எஸ்டாடியோ அக்ரான் மைதானத்தில் நேற்று ‘ஹெச்’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஸ்பெயின் - உருகுவே அணிகள் மோதின. இதில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் வீரர் லோரன்டே பெனால்டி பாக்ஸிற்குள் தரையோடு தரையாக பந்தைக் கடத்தினார்.
அதை உருகுவே டிஃபென்ஸ் கையாள தவறிய நிலையில் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஸ்பெயின் அணியின் அலெக்ஸ் பயேனா மின்னல் வேகத்தில் சுழன்று ஷாட் அடித்தார். அது உருகுவே கோல்கீப்பர் பெர்னாண்டோ முஸ்லெராவின் கைகளைத் தாண்டி கோல் வலைக்குள் தஞ்சம் புகுந்தது. இதுவே ஸ்பெயின் அணியின் வெற்றி கோலாகவும் அமைந்தது.
அலெக்ஸ் பயேனா அடித்த பந்தை முஸ்லெரா முழுமையாகத் தட்டிவிட முடியாமல் போனதால் உருகுவே அணி இந்த கோலை வாங்கியது. இதன் காரணமாக, இடைவேளையின்போது பயிற்சியாளர் மார்செலோ பியெல்சா, முஸ்லெராவை அவரை ஆட்டத்திலிருந்து வெளியேற்றி மாற்று வீரரைக் களம் இறக்கினார். அவர், சிறப்பாக செயல்பட்டு ஸ்பெயின் அணி மேற்கொண்டு கோல் அடிக்க விடாமல் பார்த்துக் கொண்டார். ஆனால் ஸ்பெயின் அணியின் தற்காப்பு அரண்களை கடந்து உருகுவே அணியால் பதில் கோல் அடிக்க முடியாமல் போனது.
இந்த வெற்றியின் மூலம் ஸ்பெயின் அணி 7 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. அந்த அணி முதல் ஆட்டத்தை கேப் வெர்டேவுக்கு எதிராக கோல்களின்றி டிரா செய்திருந்தது. 2-வது ஆட்டத்தில் சவூதி அரேபியாவை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது. நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின் அணி ‘ஜே’ பிரிவில் 2-வது இடத்தை பிடிக்கும் நிலையில் உள்ள ஆஸ்திரியா அல்லது அல்ஜீரியா அணியை எதிர்கொள்ளும்.
இரு முறை சாம்பியனான உருகுவே அணி நடப்பு தொடரில் ஒரு வெற்றியை கூட பெறாமல் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறி உள்ளது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் சவூதி அரேபியாவை 1-1 என டிரா செய்திருந்தது. தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் அறிமுக அணியான கேப் வெர்டே அணிக்கு எதிராக 2-2 என டிரா கண்டிருந்தது. தற்போதைய தோல்வியால் வெறும் 2 புள்ளிகளை மட்டுமே பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை உருகுவே அணி இழந்துள்ளது.
உருகுவே அணி தனது பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்தபோதிலும், அடுத்த சுற்றுக்கு முன்னேறக்கூடிய 'சிறந்த எட்டு மூன்றாவது இடம்பிடித்த அணிகளின்' வரிசையில் இடம் பெறுவதற்குத் தேவையான புள்ளிகளைப் பெறவில்லை. பிஃபா உலகத் தரவரிசையில் 19-வது இடத்தில் உள்ள உருகுவே அணி, இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை வெளியேற்றப்பட்ட அணிகளிலேயே மிக உயர்ந்த தரவரிசையில் உள்ள அணியாகும்.