

புதுடெல்லி: கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரத்தில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவியை ராஜினாமா செய்தார்.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. டெல்லியில் இவர் வசித்து வந்த அரசு பங்களாவில் கடந்த ஆண்டு மார்ச் 14-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும்போது வீட்டின் ஓர் அறையில் பாதி எரிந்த நிலையில் ரூ.500 நோட்டுகள் மூட்டை, மூட்டையாக கண்டெடுக்கப்பட்டது.
கடும் கண்டனத்துக்கு ஆளான வர்மா அப்பணம் தனக்கு சொந்தமானது அல்ல என மறுத்தார். அந்த அறை அனைவரும் அணுகக்கூடிய வகையில் இருந்ததாக அவர் கூறினார். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் மார்ச் 22-ம் தேதி அமைத்தது. இக்குழு தனது அறிக்கையை அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிடம் மே 4-ம் தேதி அளித்தது.
இதையடுத்து வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் மாற்றியது. அவருக்கு நீதித்துறை பணி எதுவும் ஒதுக்க வேண்டாம் தலைமை நீதிபதியிடம் கேட்டுக்கொண்டது. நீதிபதி வர்மாவை பதவியில் இருந்து நீக்குவதற்கான பதவி நீக்க நடைமுறை நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை சபாநாயகர் ஓம்பிர்லா கடந்த ஆகஸ்ட் மாதம் அமைத்தார்.
இக்குழுவின் அறிக்கைக்காக காத்திருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியிருந்தார். இந்நிலையில் நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இந்தக் கடிதத்தை சமர்ப்பிக்க என்னை நிர்பந்தித்த காரணங்களைக் கூறி, உங்கள் மேன்மைமிகு அலுவலகத்திற்கு சுமையை ஏற்படுத்த நான் விரும்பவில்லை. ஆழ்ந்த மனவேதனையுடன், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து விலகுகிறேன்’’ என்று கூறி உள்ளார்.
வர்மா பதவி விலகியுள்ளதால் அவரது பதவி நீக்க நடைமுறை முடிவுக்கு வரும் என மக்களவை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், வர்மா பதவி விலகியிருப்பதால், ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகளைப் பெற அவர் தகுதியுடையவர் ஆகிறார். நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தால், இந்த சலுகைகள் அவருக்கு மறுக்கப்பட்டிருக்கும்.