

புதுடெல்லி: மேற்கு ஆசிய நிலவரம் குறித்து ஆலோசிக்க நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றனர். மேற்கு ஆசிய நிலவரம் குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விரிவான விளக்கம் அளித்தார்.
அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ஹர்தீப் சிங் புரி ஆகியோர் பேசினர். எரிசக்தி பாதிப்பு குறித்தும், கச்சா எண்ணெய், எல்பிஜி, உரங்கள் ஆகியவை போதிய அளவில் இருப்பு உள்ளது குறித்தும் ஹர்தீப் சிங் புரி விளக்கினார். மேற்கு ஆசியா விவகாரத்தில் பாகிஸ்தானின் பங்கு குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். எதிர்கட்சி பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகள் அனைத்திற்கும் மத்திய அரசு திருப்திகரமாக பதில் அளித்ததாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.