

புதுடெல்லி: கடந்த மக்களவைத் தேர்தலில் என்டிஏ கூட்டணிக்கு முந்தைய தேர்தலை விட குறைந்த தொகுதிகள் கிடைத்தன. இதனால் சோர்வடைந்த என்டிஏ-வுக்கு அடுத்தடுத்த சட்டப்பேரவை தேர்தல் வெற்றிகள் ஆறுதலை ஏற்படுத்தி உள்ளன.
இந்த வெற்றியின் பலனாக மாநிலங்களவையிலும் என்டிஏ பலம் கூடுகிறது. இதனால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தனது வேட்பாளரைத் தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்படாத நிலை உருவாகி விட்டது.
மகாராஷ்டிரா, பிஹார் சட்டப்பேரவைகளில், தனது கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து பாஜக வலுவான நிலையில் உள்ளது. இது, மக்களவையில் இழந்த இடங்களை ஈடுசெய்யும் வகையில் இருக்கும். தற்போது அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றுள்ளது.
இவற்றில், மகராஷ்டிரா, பிஹார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள், உ.பி.க்கு அடுத்தபடியாக, குடியரசுத் தலைவர் தேர்தலில் செல்வாக்கு பெற்றவை. கடந்த 2022 குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்காளர் குழுவில் பாஜகவின் மொத்த வாக்குகள் மதிப்பு 10 லட்சத்து 86,431 ஆக இருந்தது.
2024 மக்களவை தேர்தலுக்கு பிறகு இந்த வாக்குகள் மதிப்பு 44,100 குறைந்தது. இதற்கு 2024 மக்களவை தேர்தலில் பாஜக எம்பிக்கள் எண்ணிக்கை 240 ஆக குறைந்தது காரணமானது. இதில் பெரும்பான்மைக்கான 272 எம்பிக்களை தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவில் பாஜக பெற்றது.
ஆனால் அடுத்து வந்த ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துச் சிரமங்களையும் மீறி பாஜக மகத்தான வெற்றிபெற்றது. தொடர்ந்து வந்த மகராஷ்டிரா, பிஹார், அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் தேர்தலிலும் பாஜகவுக்கு வெற்றியே கிடைத்தன. இந்த வெற்றிகளின் காரணமாக, குடியரசு தேர்தல் வாக்காளர் குழுவில் என்டிஏ பலம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பாஜக ஆளும் உ.பி.யின் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற உள்ளது. அதன் பிறகு ஜுலையில் வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் உ.பி. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உள்ளது, ஏனெனில் வாக்காளர் குழுவில் அதன் வாக்குகளின் மதிப்பு 83,800-ஐ தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.