

நடிகர் டைகர் ஷெராப்
புதுடெல்லி: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீதான துப்பாக்கிச் சூடு வழக்கில் கைதான 11 பேரில், 2 பெண்கள் உள்ளிட்ட 8 பேருக்கு, தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளியான அனில் பண்டிட்டுடன் நேரடித் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மும்பையில் கடந்த அக்.18-ம் தேதி நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் உயிர் தப்பினார். இவ்வழக்கில் மும்பை காவல் துறை இதுவரை 11 பேரை கைது செய்துள்ளது. இந்த சம்பவத்தில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கெனவே கைதாகி குஜராத் சிறையிலிருக்கும் லாரன்ஸ், அங்கிருந்தபடி தனது கும்பலுக்கு உத்தரவிடுவதாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக, லாரன்ஸின் நம்பகமானவரான அனில் பண்டிட் அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளார். அவரது உத்தரவின் பேரில் நடிகர் ஷெராப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் கைதான 11 பேரில் ராதா வர்மா மற்றும் பபிதா ராவ் ஆகிய 2 பெண்கள் உள்ளிட்ட 8 பேர் அனில் பண்டிட்டுடன் நேரடித் தொடர்பில் உள்ளனர். இந்த 11 பேரும் அனிலின் கட்டளைப்படி செயல்பட்டவர்கள் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர்களது தொடர்பை விசாரித்து வருவதுடன், இந்தச் சதித்திட்டம் எவ்வாறு திட்டமிடப்பட்டது? மற்றும் இதில் யார் என்ன பங்கு வகித்தனர்? என்பதைக் கண்டறியவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக அவர்களது கைப்பேசி அழைப்புப் பதிவுகள், டிஜிட்டல் தகவல் தொடர்புகள் மற்றும் பிற தொழில்நுட்ப ஆதாரங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இவர்களில், 2 பெண்களான ராதா மற்றும் பபிதா, பாலிவுட் நடிகர்களைக் குறிவைக்க மும்பையில் நோட்டமிட்டதாக காவல் துறை சந்தேகிக்கிறது. ஹரியானாவைச் சேர்ந்த இப்பெண்களின் கைப்பேசிகளில் பல முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளன.
இப்பெண்களுக்கும் இந்த முழு சதித்திட்டம் குறித்து முன்பே தெரிந்துள்ளது. நகரின் பிரபல நடிகர்கள் மற்றும் முக்கிய தொழிலதிபர்களை நோட்டமிட்டு, அந்தத் தகவலை அனில் பண்டிட்டிடம் தெரிவித்துள்ளனர்.