

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் பிரதமருக்கு எதிராக அசம்பாவித சம்பவங்களை நிகழ்த்த எதிர்க்கட்சி எம்பிக்கள் திட்டமிட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா கூறி இருப்பது முழுக்க முழுக்க பொய் என்று காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்பாராத செயலில் ஈடுபடக்கூடும் என்ற தகவல் கிடைத்ததால் அவைக்கு வர வேண்டாம் என பிரதமரை கேட்டுக்கொண்டதாக ஓம் பிர்லா கூறி இருப்பது குறித்து செய்தியாளர்கள் பிரியங்கா காந்தி வத்ராவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், ‘‘இது முழுக்க முழுக்க பொய். பிரதமர் மீது கை வைப்பது அல்லது தாக்குவது என்ற கேள்விக்கே இடமில்லை. அப்படி ஒரு திட்டம் இருந்தது என்று யாராவது சொன்னால் அது முற்றிலும் தவறு.
மூன்று பெண் எம்பிக்கள் பிரதமர் இருக்கைக்கு முன் நின்றார்கள். அதனால் என்ன? பிரதமர், சபாநாயகருக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறார். அவருக்கு அவைக்கு வர துணிச்சல் இல்லை’’ என குற்றம் சாட்டினார்.
முன்னதாக இந்த விவகாரம் குறித்துப் பேசிய சபாநாயகர் ஒம் பிர்லா, ‘‘மக்களவையில் சில எம்பிக்கள் முறையற்ற முறையில் நடந்து கொண்டனர். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரை நிகழ்த்த பிரதமர் மோடி மக்களவைக்கு வருவதாக இருந்தார். அவர் வருவதற்கு முன்பாக, காங்கிரஸ் பெண் எம்பிக்கள் பிரதமர் இருக்கையைச் சுற்றி வளைத்திருந்தனர்.
பிரதமரின் உரையின்போது, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி எம்பிக்கள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்யலாம் என்று எனக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்தது. அரசியல் கருத்து வேறுபாடுகள் நாடாளுமன்ற அவைக்குள் கொண்டுவரப்பட்டதில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில எம்பிக்கள், பிரதமரின் இருக்கைக்குச் சென்று எதிர்பாராத ஒரு சம்பவத்தை நிகழ்த்தக்கூடும் என எனக்கு நம்பகமான தகவல் கிடைத்தது.
அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் அது தேசத்தின் கண்ணியத்துக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கும். அதனால்தான், நடாளுமன்றத்துக்கு வர வேண்டாம் என பிரதமரை நான் கேட்டுக்கொண்டேன். நேற்று நடந்தது நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு கரும்புள்ளி’’ என ஓம் பிர்லா தெரிவித்தார்.