ராகவ் சத்தாவிடம் இருந்து மாநிலங்களவை கட்சித் துணைத் தலைவர் பதவியை பறிக்க ஆம் ஆத்மி நடவடிக்கை

ராகவ் சத்தாவிடம் இருந்து மாநிலங்களவை கட்சித் துணைத் தலைவர் பதவியை பறிக்க ஆம் ஆத்மி நடவடிக்கை
Updated on
1 min read

புதுடெல்லி: மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து ராகவ் சத்தாவை நீக்கக் கோரி, மாநிலங்களவை செயலகத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

ராகவ் சத்தாவுக்குப் பதில், பஞ்சாபைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் அசோக் மிட்டல் புதிய துணைத் தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக அக்கட்சி கூறியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சிக்கு மாநிலங்களவையில் 10 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் ஏழு பேர் பஞ்சாபில் இருந்தும், மூன்று பேர் டெல்லியில் இருந்தும் தேர்வாகி உள்ளனர்.

இந்நிலையில், பஞ்சாபில் இருந்து தேர்வாகிய ராகவ் சத்தாவை மாநிலங்களவையில் கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, அதே மாநிலத்தில் இருந்து தேர்வாகிய மற்றொரு உறுப்பினரான அசோக் மிட்டலை அப்பதவிக்கு நியமிக்க கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அசோக் மிட்டல், ‘‘ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை துணைத் தலைவர் பொறுப்பை, கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் (அரவிந்த் கேஜ்ரிவால்) என்னிடம் ஒப்படைத்துள்ளார். நான் எனது கடமைகளை சரியாகச் செய்வேன். கட்சியின் நிலைப்பாட்டையும், நாட்டின் நலன்களையும் அவையில் நான் வலிமையுடன் எடுத்துரைப்பேன்.

இது ஒரு வழக்கமான நடைமுறைதான். இதற்கு முன் மாநிலங்களவைத் துணைத் தலைவராக என்.டி. குப்தா இருந்தார். அவருக்குப் பதிலாக ராகவ் சத்தா வந்தார். தற்போது அப்பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எங்கள் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் கற்றுத் தெளிய வேண்டும் என்று கட்சி விரும்புகிறது. குறிப்பாக அரசியலில் உள்ள நடைமுறைகளையும், நிர்வாகத் திறன்களையும் நான் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருக்கலாம்’’ என்று கூறினார்.

ஆனால், ஆம் ஆத்மி கட்சி தொடர்பான விவகாரங்களில் ராகவ் சத்தா நீண்ட காலமாக மவுனம் காத்து வருவதாலும், கேஜ்ரிவால் முன்னின்று நடத்திய பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளாமல் இருந்ததுமே இந்த நடவடிக்கைக்குக் காரணம் என கூறப்படுகிறது.

ராகவ் சத்தாவிடம் இருந்து மாநிலங்களவை கட்சித் துணைத் தலைவர் பதவியை பறிக்க ஆம் ஆத்மி நடவடிக்கை
“நான் தவறாக பேசவில்லை” - எடப்பாடி பழனிசாமிக்கு உதயநிதி ஸ்டாலின் பதில்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in