“நான் தவறாக பேசவில்லை” - எடப்பாடி பழனிசாமிக்கு உதயநிதி ஸ்டாலின் பதில்

“நான் தவறாக பேசவில்லை” - எடப்பாடி பழனிசாமிக்கு உதயநிதி ஸ்டாலின் பதில்
Updated on
3 min read

வேலூர்: ‘‘எடப்பாடி பழனிச்சாமி ஒரு கூட்டத்தில் பேசும்போது, உதயநிதி தகாத வார்த்தைகளால் பேசுகின்றார் என கூறியுள்ளார். நான் என்றாவது தவறாக பேசியிருக்கின்றேனா? தவறாக பேசியதே கிடையாது. முரட்டு தொண்டன் என்று பேசிவிட்டேன் என்று வருத்தப்பட்டு பேசுகின்றார். உண்மையாக சொல்கின்றேன். நான் அவரை முரட்டு தொண்டன் என்று பேசவே இல்லை. அவர் ஒன்னாம் நம்பர் முரட்டு அடிமை என்றுதான் சொன்னேன்’’ என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞரணிச் செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் நந்தகுமாரை ஆதரித்து ஒடுக்கத்தூர் பேருந்து நிலைய பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், ‘‘சென்ற சட்டமன்ற தேர்தலின்போது என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தோமோ அதையெல்லாம் செய்து கொடுத்திருக்கின்றோம். ஆட்சிப் பொறுப்பேற்றதும் நம் தலைவர் முதல்வர் ஆனவுடன் அவர் போட்ட முதல் கையெழுத்து ‘மகளிருக்கு விடியல் பயணத் திட்டம்’. ஒவ்வொரு மகளிரும் மாதம் 900 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை இந்தத் திட்டத்தின் மூலம் சேமித்தார்கள்.

குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு வர வேண்டும், படிக்க வேண்டும் என்று அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய அனைத்துக் குழந்தைகளுக்கும் முதல்வர் காலை உணவுத் திட்டம். தரமான உணவு, அதன் பிறகு தரமான கல்வி கொடுக்கப்பட்டது.

அடுத்துக் கல்லூரிக்கு சென்று படிப்பதற்கு ஊக்குவிக்க ‘கல்வி உதவித் தொகை’. அரசுப் பள்ளியில் படித்து எந்தக் கல்லூரியில் சேர்ந்தாலும், தனியார் கல்லூரியாக இருந்தாலும் அவர்களுக்குக் கல்வி ஊக்கத்தொகையாக மாதம் 1,000 ரூபாய் நம் முதல்வர் கொடுத்தார். கிட்டத்தட்ட 12 லட்சம் மாணவ மாணவிகள் இதில் பயன்பெற்றிருக்கிறார்கள்.

கடந்த மாதம் முதல்வர், 10 லட்சம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை கொடுத்திருக்கிறார். இவை அனைத்தையும் விட மிகப்பெரிய ஒரு திட்டம், ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது நாம் கொடுத்த வாக்குறுதி. மூன்று வருடமாக ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையை நம் அரசு கொடுத்திருக்கிறது.

அந்தத் திட்டத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் திட்டம் போட்டார்கள். தேர்தலைக் காரணம் காட்டி மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த வேண்டும் என்று முயற்சி செய்தார்கள். ஆனால் நம் தலைவர் என்ன செய்தார்? நான் 1,000 ரூபாய் கொடுப்பதைத் நீ நிறுத்துகிறாயா? இப்போது நான் கொடுக்கிறேன் என்று சொல்லி 5,000 ரூபாய் கடந்த மாதம் கொடுத்தார்.

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்ற கலைஞர் வழியில் வந்த நம்முடைய முதல்வர் தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்துள்ளார். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்த உடனே மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாயை உயர்த்தி 2,000 ரூபாய் தருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார். முதல்வர் காலை உணவுத் திட்டம், நாம் மீண்டும் ஆட்சிக்கு வந்த உடனே எட்டாம் வகுப்பு வரை இலவச முதல்வர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று வாக்குறுதி. தமிழ்ப் புதல்வன், புதுமைப்பெண் திட்டம் கல்வி ஊக்கத் தொகை 1,000 ரூபாயிலிருந்து 1,500-ஆக உயர்த்தித் தரப்படும். 10 லட்சம் பேருக்கு கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் மூலம் புதிதாக வீடு கட்டிக் தரப்படும். 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தரப்படும்.

பல வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறோம். எல்லாவற்றையும் விட மிக, மிக முக்கியமான வாக்குறுதி. மகளிர் உங்களுக்குத் தெரியும், அதுதான் ‘இல்லத்தரசி திட்டம்’. ஆட்சிப் பொறுப்பேற்ற உடனே முதல்வர் ஆனவுடனே நம் தலைவர் மகளிருக்கு 8,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு கூப்பன் கொடுத்துவிடுவார். அந்தச் கூப்பனில் உங்கள் வீட்டுக்குத் தேவையான மின் சாதன பொருட்களை நீங்களே தேர்வு செய்து வாங்கிக்கொள்ளலாம். பிரிட்ஜ், டிவி, குக்கர், வாஷிங் மெஷின் இவற்றில் எதுவாக இருந்தாலும் 8,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை மகளிர் நீங்களே முடிவு செய்து வாங்கிக்கொள்ளலாம்.

நம் தலைவர் தொடர்ந்து சொல்கிறார். வருகின்ற சட்டமன்ற தேர்தல் டெல்லிக்கும், தமிழ்நாடு அணிக்கும் நடக்கின்ற தேர்தல். ஏன் டெல்லி அணி என்று சொல்கின்றோம். டெல்லி அணியில் மோடி, அமித் ஷா அவர்களுடன் இந்த அடிமைக் கூட்டமும் இருக்கின்றது.

நேற்று எடப்பாடி பழனிச்சாமி ஒரு கூட்டத்தில் பேசும்போது, என்னைக் குறிப்பிட்டு உதயநிதி மட்டமாக என்னை பேசுகின்றார். தகாத வார்த்தைகளால் பேசுகின்றார். நான் என்றாவது தவறாக பேசியிருக்கின்றேனா? தவறாக பேசியதே கிடையாது. முரட்டு தொண்டன் என்று பேசிவிட்டேன் என்று வருத்தப்பட்டு பேசுகின்றார். உண்மையாக சொல்கின்றேன். நான் அவரை முரட்டு தொண்டன் என்று பேசவே இல்லை. அவர் ஒன்னாம் நம்பர் முரட்டு அடிமை என்றுதான் சொன்னேன்.

அவர் என்ன சொன்னார் தெரியுமா? அவர் அளவிற்கு எனக்கு அனுபவம் இல்லை. உதயநிதி உன் வயசு எனது அனுபவம் என்று சொல்லியிருக்கின்றார். ஆமாம். அவர் அளவிற்கு எனக்கு அனுபவம் இல்லைதான். அவர் அனுபவத்தை விட எனக்கு குறைந்த அனுபவம்தான். ஆனால் என்னுடைய அனுபவம் என்ன? எந்த மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் பயப்படாத அனுபவம் என்னுடைய அனுபவம்.

யார்கிட்டேயும், குறிப்பாக சங்கிக் கூட்டத்திடம் தலைவணங்காத அனுபவம் என் அனுபவம். எப்போதுமே சுயமரியாதையுடன் நடக்கும் அனுபவம் என்னுடைய அனுபவம். தமிழ்நாட்டின் உரிமைக்காக என்றைக்கும் களத்தில் நிற்கும் அனுபவம் என் அனுபவம்.

எடப்பாடி பழனிச்சாமியிடம் என்ன அனுபவம் இருக்கின்றது? சிந்தித்து பாருங்கள். ஜெயலிலதா அம்மா இருந்தவரைக்கும் அந்த அம்மாவின் கால். அந்த அம்மா இறந்தவுடன் சசிகலா அம்மாவின் கால். சசிகலா அம்மா உள்ளே சென்றவுடன் ஓ.பி.எஸ். கால், இன்று எல்லாவற்றையும் விட்டு, விட்டு மோடி, அமித்ஷா ஆகியோரின் காலை பிடித்துக் கொண்டு உள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. அதுதான் அவருடைய அனுபவம். யார் காலில் விழுந்தாரோ அந்த காலையெல்லாம் வாரிவிட்ட அனுபவம் எடப்பாடிக்கு உண்டு.

நான் ஒன்றும் டெல்லிக்கு 4 கார் மாறி போய் திருட்டுத்தனமாக அமித் ஷாவை பார்த்துவிட்டு வரவில்லை. நான் ஒன்றும் மோடி, அமித்ஷாவை பார்த்துவிட்டு முகத்தை மூடிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. இந்த அனுபவம் எல்லாம் எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கின்றது.

பத்து தோல்வி பழனிச்சாமியை இந்த தேர்தலுடன் மொத்த தோல்வி பழனிச்சாமியாக முடித்து வீட்டிற்கு அனுப்ப வேண்டிய தேர்தல் வருகின்ற சட்டமன்ற தேர்தல். பிஜேபி யை தமிழ்நாட்டிற்குள் நுழைய விடக்கூடாது. தமிழ்நாடு எப்போதுமே டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான் என்பதை நிரூபித்து காட்டுவீர்களா?

பிஜேபி நமது மாநில உரிமைகள் எல்லாவற்றையும் பறிக்க பார்க்கின்றார்கள். நிதி உரிமையை பறிக்கின்றார்கள். இதையெல்லாம் மீறி நமது முதல்வர் தலைமையில் இன்று தமிழ்நாடு வளர்ச்சியில் 11.19 சதவீத வளர்ச்சியுடன் முதல் மாநிலமாக உள்ளது.

இந்த அரசின் சாதனைகள் தொடர வேண்டுமென்றால் மீண்டும் நம் தலைவர் இரண்டாவது முறையாக முதல்வர் நாற்காலியில் உட்கார வேண்டுமென்றால் அது உங்களின் கைகளில்தான் இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.

“நான் தவறாக பேசவில்லை” - எடப்பாடி பழனிசாமிக்கு உதயநிதி ஸ்டாலின் பதில்
சிறுமிக்கு ரூ.25 லட்சம் மதிப்பு சிகிச்சையை அளித்த சென்னை அரசு மருத்துவமனைக்கு ஸ்டாலின் பாராட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in