Published : 01 Jun 2023 12:48 PM
Last Updated : 01 Jun 2023 12:48 PM

‘எனது போன் ஒட்டுக்கேட்கப்படுவதாக நான்  கருதுகிறேன்’ - அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

ராகுல் காந்தி | கோப்புப்படம்

வாஷிங்டன்: "எனது போன் ஒட்டுக்கேட்கப்படுகிறது. நான் என்னனென்ன வேலைகளைச் செய்கிறேன் எனத் தெரிந்து கொள்ள எனது அரசு விரும்புவதாக நான் கருதுகிறேன்" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு குறித்த விவாதம் ஒன்றில் பங்கேற்ற அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாளான புதன்கிழமை பாதி நாள் முழுவதும் சிலிகான் வேலியின் 'ஸ்டார்ட் அப்' தொழில் முனைவோர்களுடன் செலவிட்டார்.

ப்ளக் அண்ட் ப்ளே அரங்கத்தில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு நிபுணர்களின் குழு விவாதத்தில் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா மற்றும் இந்தியாவிலிருந்து அவருடன் பயணம் செய்யும் முக்கிய உதவியாளர்களுடன் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

அப்போது, செயற்கை நுண்ணறிவு, தரவுகள், இயந்திரம் மூலமாக கற்றல், மனித குலத்தின் மீதான அவற்றின் பொதுவான மற்றும் சமூக நலன் சார்ந்த மதிப்பீடுகளில் ஏற்படும் தாக்கம், தகவல் பிழைகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ப்ளக் அண்ட் ப்ளே நிறுவனர் அமிடி மற்றும் ஃபிக்ஸ் நெக்ஸ் ஸ்டார்ட் அப்-ன் நிறுவனர் ஷான் ஷங்கரனுடன் நடந்த காரசாரமான விவாதத்தில், ராகுல் காந்தி இந்தத் தொழில்நுட்ப மாற்றங்கள் இந்தியாவின் தொலைதூர கிராமங்களில் உள்ள சாமானியனிடத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

அப்போது அவர்,"இந்தியாவில் நீங்கள் ஒரு தொழில்நுட்பத்தை பரப்ப விரும்பினால், ஒப்பீட்டளவில் அதிகாரம் பரவலாக்கப்பட்ட ஒரு அமைப்பை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். தரவுகளைப் பொறுத்தவரை இந்தியா போன்ற நாடுகள் அதன் உண்மையான திறனை அறிந்திருக்கின்றன. அங்கு தரவுகளின் பாதுகாப்பு குறித்த முறையான ஒழுங்குமுறைகளின் தேவை இருக்கிறது. என்றாலும் பெகாசஸ் போன்ற தொழில்நுட்பங்கள் குறித்து நான் கவலை கொள்ளவில்லை.

எனது போன் ஒட்டுக்கேட்கப்படுகிறது என்று நான் கருதுகிறேன். ஒரு தேசத்திற்கான தனிநபர்களுக்கான தனியுரிமை தகவல் குறித்த கொள்கைகளை நீங்கள் நிறுவ வேண்டும்" என்றார். அப்போது விளையாட்டாக தனது ஐபோனை எடுத்து ‘ஹலோ மிஸ்டர் மோடி..’ என்றார்.

தொடர்ந்து "ஒருநாட்டின் அரசு உங்களுடைய போனை ஒட்டுக்கேட்க விரும்பினால், யாரும் உங்களைத் தடுக்க முடியாது, இது என்னுடைய எண்ணம். ஒரு நாடு உங்கள் போனை ஒட்டுக்கேட்க விரும்பும் போது, அது சண்டையிடுவதற்கான சரியான களம் இல்லை. நான் என்ன வேலைகள் எல்லாம் செய்கிறேன் என்று தெரிந்து கொள்ள அரசு விரும்புகிறது என்று நான் நினைக்கிறேன்" என்று குற்றம்சாட்டினார்.

ப்ளக் அண்ட் ப்ளேவில், செயற்கை நுண்ணறிவு குறித்து நடந்த இந்த நிகழ்வைத் தொகுத்து வழங்கிய ஷங்கரன், தற்கால தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சி குறித்த ராகுல் காந்தியின் அறிவு தன்னை வியப்படையச் செய்வதாக தெரிவித்தார்.

கலிபோர்னியாவை அடிப்படையாகக் கொண்ட சன்னிவேலியிலுள்ள ப்ளக் அண்ட் ப்ளே தொழில்நுட்ப மையம், அங்குள்ள மிகப்பெரிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருக்கும் மையமாகும். அதன் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் சயீடு அமிடி-ன் கூற்றுப்படி, அங்குள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்கியவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிமானவர்கள் இந்தியர்கள் அல்லது இந்திய அமெரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x