

5-வது முறையாக ஐபிஎல் சாம்பியன் ஆன சென்னை அணி!: ஐந்தாம் முறையாக ஐபிஎல் கோப்பை வென்று சாதனை செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் 5-வது பந்தை ஜடேஜா சிக்ஸருக்கு பறக்கவிட ஆட்டத்தின் பரபரப்பு அதிகமானது. கடைசி பந்தை ஜடேஜா பைன் லெக் திசையில் பவுண்டரிக்கு விரட்ட சிஎஸ்கே அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சமன் செய்தது சிஎஸ்கே அணி.
வெற்றிக்கு பின் பேசிய சென்னை கேப்டன் தோனி, “சொல்லப்போனால், ஓய்வை அறிவிக்க இதுவே சிறந்த நேரம். ஆனால், நான் பெற்ற ரசிகர்களின் அன்பின் அளவுக்கு, என்னால் அவர்களுக்குத் திருப்பி தரக்கூடிய பரிசு என்பது இன்னும் ஒரு சீசன் அவர்களுக்காக விளையாடுவதுதான்” என்றார்.
குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில், "தோனியின் அணி வெற்றி பெற்றது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த முடிவு தோனிக்காக எழுதப்பட்டுள்ளது. ஒருவேளை நான் தோற்க வேண்டும் என்றால், அது தோனியிடம் என்றால் அதற்கு நான் கவலைப்பட போவதில்லை. நல்ல மனிதர்களுக்கு நல்லதே நடக்கும்" என்றார்.
தோனியும் சில உணர்வுபூர்வ தருணங்களும்: வழக்கமாக வெற்றிக் கொண்டாட்டத்தில் தோனி பெரிதும் ஈடுபட மாட்டார். அவர், கடைசி 2 பந்துகளில் ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி வெற்றி தேடி கொடுத்த ரவீந்திர ஜடேஜாவை அப்படியே தூக்கி சுமந்தது ரசிகர்களுக்கு அற்புத தருணமாக இருந்தது. குறிப்பாக, ஜடேஜாவை தூக்கிக் கொண்டாடியபோது அவரது கண்களின் ஆனந்தக் கண்ணீர் எட்டிப் பார்த்ததையும் கவனிக்க முடிந்தது. அதிகாலை 3 மணி அளவில் மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் அருகே சென்று தோனி நன்றி தெரிவித்திருந்தார்.
இந்தப் போட்டி குஜராத் டைட்டன்ஸ் அணியின் சொந்த மைதானமான நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. மைதானத்தின் மொத்த எண்ணிக்கை சுமார் 1.32 லட்சம் இருக்கைகள். அதில் பெரும்பாலானவர்கள் சென்னை அணியின் ஆதரவாளர்கள். அதை சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெம்மிங் மகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார். இதை அப்படியே மிரட்சியுடன் பார்த்திருந்தார் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா.
இந்த சீசனுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்த அம்பதி ராயுடுவும் இறுதிப் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணிக்கு வலு சேர்த்தார். அவர் கையில் கோப்பையை அளித்து அழகுபார்த்தார் தோனி.
மல்யுத்த வீராங்கனைகள் அதிரடி அறிவிப்பு: “நாங்கள் ஒலிம்பிக் உள்பட சர்வதேசப் போட்டிகளில் வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசிவிட்டு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்” என்று மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மல்யுத்த வீராங்கனைகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தப் பதக்கங்கள்தான் எங்களின் வாழ்க்கையும், ஆன்மாவும். இதை நாங்கள் கங்கை நதியில் வீசிய பின்னர் வாழ்வதற்கான அர்த்தமே இருக்காது. அதனால், இந்தியா கேட் சென்று சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
“மணிப்பூர் நிலைமை சீராக சிறிது காலமாகும்”: மணிப்பூரில் எதிர்கொள்ளக் கூடிய சவால்கள் இன்னும் சரியாகிவிடவில்லை என்றும், அங்கு நிலைமை சீராக சில காலம் ஆகலாம் என்றும் முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார். மேலும், வடகிழக்கு மாநிலங்களில் தற்போதுள்ள சூழல் வன்முறையுடன் தொடர்புடையதாக இல்லை என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதனிடையே மணிப்பூரில் அமைதி நிலவ மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
9 ஆண்டுகள் நிறைவு குறித்து பிரதமர் மோடி கருத்து: நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பதவி ஏற்று 9 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், “இந்த நாட்டிற்கான சேவையில் இன்று நாம் 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளோம். பணி மற்றும் நன்றியுணர்வால் நான் நிறைந்திருக்கிறேன். வளர்ந்த இந்தியாவை உருவாக்க இன்னும் கடினமாக நாம் உழைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி சிறுமி கொலை: ஷாஹிலுக்கு 2 நாள் போலீஸ் காவல்: தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை படுகொலை செய்த இளைஞர் ஷாஹில், தங்களுக்குள் காதல் முறிவு ஏற்பட்டதாலேயே கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, அவரை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி மெட்ரோபாலிட்டன் மேஜிஸ்திரேட் ஜோதி நயின் உத்தரவிட்டுள்ளார். அதேவேளையில், கொலையான சிறுமி நிக்கியின் குடும்பத்துக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.
‘காவிரிப் படுகையில் தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்துக’: காவிரிப் படுகையில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலைமைப் பொறியாளர் நிலையிலான அதிகாரி ஒருவரை அனுப்பி, ஒரு வாரத்திற்குள் தூர்வாரும் பணிகள் நிறைவு செய்வதை அமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அரிசிக்கொம்பன் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு: தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் கடந்த 27ம் தேதி அன்று இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பால்ராஜ் என்பவர் அரிக்கொம்பன் என்ற காட்டு யானைத் தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் சிசிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஜப்பானின் ஒம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம் ரூ.128 கோடி முதலீடு: ஜப்பான் நாட்டின் முன்னணி நிறுவனமான ஒம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம் இந்தியாவில் முதல்முறையாக, தமிழகத்தில் ரூ.128 கோடி முதலீட்டில் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு தொழிற்சாலை நிறுவிட புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
புதுச்சேரியில் தமிழை அழிக்க முயற்சி - திமுக குற்றச்சாட்டு: “மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு அவசரகதியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்துவதை புதுச்சேரி அரசு கைவிட வேண்டும்” என்று திமுக வலியுறுத்தியுள்ளது. மேலும், "தமிழை விருப்பப் பாடமாக அறிவித்திருப்பது தமிழை அழிக்க நினைக்கும் பாஜகவின் கொள்கையாகவே இதை பார்க்க முடிகிறது” என்று திமுக சாடியுள்ளது.
ஜம்முவில் பேருந்து விபத்து - 10 பேர் பலி: ஜம்முவில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மாதா வைஷ்ணோதேவி கோயிலுக்கு புனித யாத்திரை மேற்கொண்டிருந்த 10 பக்தர்கள் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.