Last Updated : 29 May, 2023 09:04 PM

 

Published : 29 May 2023 09:04 PM
Last Updated : 29 May 2023 09:04 PM

தில்லி தமிழ் சங்கத்தில் அருளாசி வழங்கிய தமிழக ஆதீனங்கள்

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நடந்த விழாவில் அருளாசி வழங்கிய தமிழக ஆதீனங்கள்

புதுடெல்லி: புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் வைக்கப்பட்டுள்ள செங்கோலை நேரில் வழங்க தமிழகத்தின் 20 சைவ ஆதீனங்கள் டெல்லி வந்திருந்தனர். அப்போது அவர்கள் தில்லி தமிழ் சங்கத்திற்கும் நேரில் சென்று அருளாசி வழங்கினர்.

அருளாசி வழங்கிய நிகழ்வில் பேரூர் ஆதீனம் ஆற்றிய உரையில், “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்ற வாக்கிற்கேற்ப சங்க நுழைவாயிலிலேயே திருவள்ளுவரின் சிலை அமைத்திருப்பது அருமை. நாட்டு விடுதலையை வரவேற்பதற்காகவே, 1946ம் ஆண்டிலேயே இந்த சங்கம் தொடங்கப்பட்டுள்ளது போல உள்ளது. தேசவிடுதலைக்கு முன்பே தொடங்கி 75 ஆண்டுகளைக் கடந்து பவள விழா கண்ட பெருமையை இச்சங்கம் கொண்டுள்ளது.

அறக்கட்டளை நிறுவி அதன்மூலம் கல்வித்தொகை அளிப்பதுடன், இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் வளர்த்துக் கொண்டிருப்பது பாராட்டத்தக்கது. தமிழ்ச் சங்கம் நூல் வெளியிடுதல்,பல்வேறு துறை சார்ந்த கலைஞர்களைக் கவுரவித்துப் பாராட்டுதல் என பல பணிகளை இச்சங்கம் அயராது செய்து வருகிறது.நமது பிரதமர் மோடி எங்கு சென்றாலும் மூத்த மொழி தமிழ் மொழியே எனக்கூறி வருகிறார். தற்பொழுது அவரிடம் செங்கோல் வழங்கப்பட்டிருப்பது சாலப் பொருத்தமாகும். நூற்றாண்டை நோக்கி வீரநடை போடும் தில்லித் தமிழ்ச் சங்கம் மென்மேலும் சிறப்பாகப் பணியாற்ற எனது வாழ்த்துக்களும், நன்றிகளும்" எனத் தெரிவித்தார்.

அடுத்து பேசிய குன்றக்குடி ஆதீன சுவாமிகள் தனது உரையில், "பாருக்குள்ளே நல்ல நாடு" என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப சிறந்து விளங்கும் நமது தேசத்திற்கு செம்மை வேண்டி பாராளுமன்றத்தில் செங்கோலை நிறுவிய பிரதமருக்கு உலக மக்களெல்லாம் நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.தமிழ் எழுத்துக்களை எல்லாம் ஆயுத எழுத்துக்களாக மாற்றியவன் பாரதி. அடிமை இந்தியாவில் ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று பாடினான். 1947ல் பெற்ற சுதந்திரம் எளிதான வெற்றியல்ல. சுதந்திரப்போரில் கண்ணீர்த் துளிகள்,வன்முறைகள், அடக்கு முறைகள், ஒடுக்கு முறைகள் இருந்தன. அவற்றை மீறி சுதந்திரம் பெற தமிழகம் மகத்தான பங்களிப்பு செய்தமைக்கு அடையாளமாய், விடுதலை அடைந்தவுடன் 1947ம் ஆண்டு நேருவிடம் செங்கோல் அளிக்கப்பட்டது.

மீண்டும் அதற்கு புத்துயிரளித்து தமிழகத்தின் ஆதீன மடாதிபதிகள் முன்னிலையில் கோளறு பதிகம் பாடி, “அரசாள்வர் ஆணை நமதே” என்ற தீந்தமிழ் ஒலிக்க இந்தியாவின் நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டது. உலக மக்கள் நாம் அனைவரும் பாரதியின் உணர்வோடு பிரதமருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற பாரதியின் வழிப் பயணிக்கும் நமது பிரதமருக்கும், தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கும் எனது நல் வாழ்த்துகளும் நன்றிகளும்" எனக் கூறினார்.

இதே நிகழ்ச்சியில் மதுரை ஆதீனம் பேசுகையில், "பாரத நாட்டில் பிறப்பது புண்ணியம். அதிலும் தமிழ்நாட்டில் பிறப்பது மிகவும் புண்ணியம். ஒரு மனிதன் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது. வல்லவனாகவும் இருக்க வேண்டும்.அதற்கு நமது பிரதமர் ஓர் உதாரணம். பாரதி போன்று எத்தனை எதிர்ப்புகளையும் சமாளித்து வரக்கூடியவர். நமது தேசத்தை தலைநிமிர வைத்தவர் நமது பிரதமர். என் கடன் பணி செய்து கிடப்பதே என்று வாழ்கிறார்.திருக்குறள், நாலடியார், புறநானுறு என சங்க இலக்கியங்களை இன்றைய குழந்தைகள் கற்கவேண்டும். கற்று அதன்படி நல்வழி நடக்கவேண்டும். சமுதாயமும் சமயமும் வேறு வேறல்ல. இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை.நாம் நமது பாரம்பரியத்தைக் காப்போம். ஒற்றுமையுடன் வாழ்வோம். சாதி பேதமின்றி ஒன்றுபட்டு இணைந்து வாழ்வோம். தமிழ்மொழியை வளர்க்கும் தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு வாழ்த்துக்கள்" என்று பேசினார்.

தொடர்ந்து வைதேகி ஹரீஷ் மற்றும் குழுவினர் வழங்கிய “உலக மகாகவி” நாடகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நிருத்ய ஸம்ஸ்ருதி அறக்கட்டளையின் நிறுவனர் குரு ஸ்ரீமதி வைதேகி ஹரீஷ் மற்றும் குழுவினரின் “உலக மகாகவி” எனும் தலைப்பில் நாட்டிய நாடகமும் நடைபெற்றது.இதில், சங்கத்தின் பொதுச்செயலாளர் முகுந்தன் பேசுகையில், "5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் மொழியானது சைவ சமயத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளது.

சைவ சமய கருத்துக்களை தமிழ் மொழியில் சான்றோர்கள் பரப்பியதால் சிவபக்தியோடு இணைந்து தமிழ்மொழியும் வளர்ச்சி பெற்றது.தமிழரின் பண்பாட்டை பறைசாற்றும் செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவிய பிரதமருக்கு தமிழ் மக்களின் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.சிறப்பு விருந்தினரான அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி பேசுகையில், "சைவ சமய ஆதீன மடாதிபதிகள் ஆசி வழங்கும் நிகழ்ச்சியில் நானும் பங்கு கொள்வதில் மிகவும் பெருமை.
அத்துடன், தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு எனது வாழ்த்துக்கள்" எனக் கூறினார்.

இந்த நிகழ்ச்சி, தில்லித் தமிழ்ச் சங்கத்தில் திங்கள்கிழமை மாலை அதன் துணைத்தலைவர் ராகவன் நாயுடு தலைமையில் நடைபெற்றது. அட்டார்னி ஜெனரலலான வெங்கட்ரமணி முன்னிலை வகித்தார். தில்லித் தமிழ்ச் சங்கத்தின் இணைச்செயலாளர் உமா சத்தியமூர்த்தி, பொருளாளர் எஸ்.அருணாச்சலம், செயற்குழு உறுப்பினர்களான வீ.ரெங்கநாதன்.ஐபிஎஸ், உஷா மற்றும் டெல்லிவாழ் தமிழர்கள் பலர் கலந்து கொண்டனர். தில்லித் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் சுந்தரேசன் தொகுப்புரையும், செயற்குழு உறுப்பினர் அமிர்தலிங்கம் நன்றியுரையும் ஆற்றினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x