Published : 28 Oct 2017 10:11 AM
Last Updated : 28 Oct 2017 10:11 AM

இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்த நாள்:கறுப்பு தினமாக அனுசரிக்க பிரிவினைவாதிகள் அழைப்பு - ஸ்ரீநகரில் கடும் கட்டுப்பாடுகள் அமல்

இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைக்கப்பட்ட நாளை, கறுப்பு தினமாக அனுசரிக்க பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்தனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க ஸ்ரீநகர் உட்பட பல இடங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஜம்மு காஷ்மீர் ராஜ்ஜியத்தின் ராஜாவாக இருந்தவர் ஹரி சிங். கடந்த 1947 அக்டோபர் 26-ம் தேதி அப்போதைய இந்திய கவர்னர் ஜெனரல் மவுன்ட் பேட்டனுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதன்படி ஜம்மு காஷ்மீர் ராஜ்ஜியம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இது அக்டோபர் 27-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்நாளை மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் இணைப்பு தினமாகக் கொண்டாடி வருகிறது.

இந்நிலையில், காஷ்மீர் இணைப்பு தினமான 27-ம் தேதியன்று (நேற்று) கறுப்பு தினம் அனுசரிக்க பிரிவினைவாதத் தலைவர்கள் சயத் அலி ஷா கிலானி, மிர்வெய்ஸ் உமர் பரூக், யாசின் மாலிக் ஆகியோர் அழைப்பு விடுத்தனர்.

இதையடுத்து தலைநகர் ஸ்ரீநகர் உட்பட காஷ்மீரில் முக்கிய பகுதிகளில் கூட்டம் கூடுவதற்கு நேற்று அதிகாரிகள் கடும் கட்டுப்பாடுகள் விதித்தனர். நவ்ஹட்டா, எம்.ஆர்.கஞ்ச், சபா கடால், ரெய்னாவரி, கன்யார், கிரால்குட், மைசுமா உட்பட பல பகுதியில் 144 சட்டப்பிரிவின் கீழ் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், முக்கிய பகுதிகளில் சிஆர்பிஎப் வீரர்கள், போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் சேவையும் நேற்று நிறுத்தப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. - ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x