Published : 31 Oct 2017 08:52 AM
Last Updated : 31 Oct 2017 08:52 AM

கேரள காதல் திருமண வழக்கில் புதிய திருப்பம்: நவம்பர் 27-ல் பெண்ணை ஆஜர்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய காதல் திருமண வழக்கில் தொடர்புடைய பெண்ணை வரும் நவம்பர் 27-ம் தேதி ஆஜர்படுத்துமாறு அவரது தந்தைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம், வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். இவரது ஒரே மகள் அகிலாவுக்கும் (24) ஷபின் ஜகான் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்காகவே அகிலா தனது பெயரை ஹாதியா என மாற்றிக் கொண்டார். ஆனால் ஷபின் ஜகான் தனது மகளை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாத ஆதிக்கம் நிறைந்த பகுதியில் பணி அமர்த்தவே திருமணம் செய்து கொண்டதாகவும் அசோகன் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

கேரளாவில் முஸ்லிம் இளைஞர்கள் ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில், வேறு மதத்தைச் சேர்ந்த பெண்களை திரமணம் செய்து கொண்டு அவர்களை தீவிரவாத அமைப்புக்கு பயன்படுத்துவதாக பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் தொடர்ந்து குறை கூறி வருகின்றன. இந்நிலையில் அசோகனின் இந்தக் குற்றச்சாட்டும் முக்கியத்துவம் பெற்றது.

இதனிடையே, தனது மகளை மீட்டு தரக்கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் அசோகன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், திருமணத்தை கடந்த மே 24-ம் தேதி ரத்து செய்தது. மேலும் அசோகனோடு அவரது மகளை அனுப்பி வைக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஷபின் ஜகான் மேல் முறையீடு செய்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரிக்க வேண்டும் என கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி உத்தரவிட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஷபின் ஜகான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, ஹரீஸ் தீரன் ஆகியோர் வாதாடும்போது, “பாஜகவில் முக்கியமான இரண்டு தலைவர்களின் வாரிசுகளே மாற்று மதத்தில் திருமணம் செய்துள்ளனர். இது முழுக்க, முழுக்க ஆத்மார்த்தமான காதலால் நிகழ்ந்துள்ளது. இதற்கு என்ஐஏ விசாரணை தேவையா? 24 வயதான பெண்ணுக்கு தனது திருமண வாழ்வை தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லையா?”என்றனர்.

இதையடுத்து, “திருமண வயதை எட்டிய இருவருக்கு இடையிலான திருமணத்தை அரசியலமைப்பு சட்டத்தின் 226-வது பிரிவின்படி உயர் நீதிமன்றம் ரத்து செய்ய முடியுமா, மணமகனை தேர்ந்தெடுப்பது பெண்ணின் உரிமை தானே?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர் அந்தப் பெண்ணை வரும் நவம்பர் 27-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அவரது தந்தைக்கு உத்தரவிட்டனர்.

கடந்த 2009-ம் ஆண்டிலிருந்தே கேரளாவில் லவ் ஜிகாத் நடந்து வருவதாக இந்து அமைப்புகள் கூறி வருகின்றன. எனினும், இது தொடர்பாக உயர் நீதிமன்றமே சந்தேகம் கிளப்பியதால் இவ்வழக்கு முக்கியத்துவம் பெறுகிறது. கேரளாவில் லவ் ஜிகாத் நடப்பதாக டி.ஜி.பி. சென்குமார் தனது ஓய்வுக்கு பின் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆனால் இதை தற்போதைய கேரள டி.ஜி.பி. லோக்நாத் பெகாரா மறுத்துள்ளார்.

மதம் பிரச்னை இல்லை

இதுகுறித்து அசோகன் ‘தி இந்து’விடம் கூறும்போது, “என் மகள் எந்த மதத்தில் இருந்தாலும் எனக்கு பிரச்சினை இல்லை. ஆனால் சரியான நபரை தேர்வு செய்திருக்கிறாரா என்றால் இல்லையே? அவர் ஏமாற்றப்பட்டு இருப்பதுதான் என் முன்பு இருக்கும் பிரச்சினை. ஷபின் ஜகானுக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது. நான் என் மகளை அடைத்து வைத்திருப்பதாக சொல்கிறார். ஆனால் என் மகள் சுதந்திரமாக உள்ளார். என் வீட்டைச் சுற்றிலும் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் என் மகளோடு இரண்டு பெண் காவலர்கள் இருக்கிறார்கள். அவள் சுதந்திரமாக உள்ளார். ஆனால் வெளியே போக அவள் விரும்பவில்லை. நான் வற்புறுத்தி வெளியே அனுப்ப அவள் சிறுபிள்ளையும் அல்ல”என்றார்.

கேரளாவில் லவ் ஜிகாத்

கேரள மாநில பஜாக பொறுப்பாளர் ஹெச்.ராஜா ‘தி இந்து’விடம் கூறும்போது, “கேரளாவில் லவ் ஜிகாத் பெரிய அளவில் நடந்து வருகிறது. இதை நீதிமன்றமே ஒப்புக் கொண்டுள்ளது. அதன் பின்பும் கேரள அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கேரளாவில் தொடர்ந்து லவ் ஜிகாத் நடந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே மாநில அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x