

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு: எதிர்கட்சிகள் புறக்கணிக்க முடிவு:வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, மதிமுக, விசிக உள்ளிட்ட 19 கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. அந்தக் கூட்டு அறிக்கை "குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை முற்றிலுமாக ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை தானே திறந்து வைக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் முடிவானது, குடியரசுத் தலைவருக்கு அவமானம் மட்டுமல்ல, நமது ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்.
நாடாளுமன்றத்தில் இருந்து ஜனநாயகத்தின் ஆன்மா உறிஞ்சப்பட்டுவிட்ட நிலையில், அந்தப் புதிய கட்டிடத்திற்கு மதிப்பு இல்லை. எனவே, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கும் எங்களின் கூட்டு முடிவை அறிவிக்கிறோம். சர்வாதிகாரப் போக்குடன் நடந்து கொள்ளும் பிரதமர் மோடி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக, அனைத்து விதித்திலும் தொடர்ந்து போராடுவோம். எங்கள் செய்தியை நாட்டு மக்களுக்கு நேரடியாக எடுத்துச் செல்வோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மத்திய அரசு: புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பது என்ற முடிவை எதிர்க்கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறுகையில், "புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா என்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு. இதை அரசியலாக்கக்கூடாது. அது நல்லதில்லை, இது அரசியல் செய்யும் நேரம் இல்லை. ஏறக்குறைய 100 வருடங்களுக்குப் பிறகு புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு அது திறக்கப்பட உள்ளது. திறப்பு விழாவை புறக்கணிப்பது என்பது பிரச்சினை இல்லாத ஒன்றை பிரச்சினையாக்குவதாகும். நான் மீண்டும் ஒருமுறை அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். எதிர்க்கட்சிகள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த நிகழ்வில் அவர்கள் தயவுகூர்ந்து கலந்து கொள்ள வேண்டும்.
நாடாளுமன்றம் என்பது சபாநாயகரின் அதிகாரத்திற்கு உட்பட்டது. நாடாளுமன்றக் கட்டிடத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு சபாநாயகர் அழைத்துள்ளார். அதன்பேரில், பிரதமர் மோடி கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார். இது குடியரசுத் தலைவரையோ, குடியரசு துணைத் தலைவரையோ அவமதிப்பதாக ஆகாது" எனத் தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் திறப்பதை ஏற்க இயலாது: வைகோ: "இந்திய நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைப்பதுதான் முறையும், மரபுமாகும். ஆனால், அதற்கு மாறாக, பிரதமர் நரேந்திர மோடியே திறந்து வைக்க முடிவு செய்துள்ளார். இதனை ஏற்க இயலாது" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதனிடையே, "வன்முறைப் பாதையில் நம்பிக்கை கொண்ட சாவர்க்கர், இந்த நாட்டில் வகுப்புவாத வெறுப்பு அரசியலுக்கு அடித்தளமிட்டவர். அவருடைய பிறந்த நாளில் நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறக்கப்படுவது நாடாளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக ஆக்கியுள்ளது" என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இந்தநிலையில், 1975 ம் ஆண்டு நாடாளுமன்ற அனெக்சர் கட்டிடத்தை திறந்து வைத்தவர் இந்திரா காந்திதானே தவிர அன்றைய குடியரசு தலைவர் அல்ல என்று தமிழக பாஜக விளக்கம் அளித்துள்ளது.
சிங்கப்பூர் தொழில் நிறுவனங்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை: அடுத்தாண்டு ஜனவரியில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அரசுமுறைப் பயணமாக செவ்வாய்க்கிழமை சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். இந்தநிலையில் புதன்கிழமை சிங்கப்பூர் நாட்டின் டமாசெக் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் தில்ஹான் பிள்ளை சந்திரசேகராவை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் தொழில் முதலீடுகள் செய்திட வேண்டுமென்று கோரிக்கை விடுத்து, சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.
மேலும், செம்ப்கார்ப் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் கிம்யின் வாங்க் மற்றும் கேப்பிட்டா லேண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சஞ்சீவ் தாஸ்குப்தா ஆகியோரைச் சந்தித்து, தமிழகத்தில் தொழில் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார் அப்போது கடல் காற்றாலைகள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், உணவு பதப்படுத்தல் துறை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில் முதலீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்ட அவர் புதன்கிழமை சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரனை சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கிடையே உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது பற்றியும், புதிய தொழில் முதலீடுகளை தமிழகத்தில் மேற்கொள்வது குறித்தும் உரையாடியதோடு, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.
‘ஊழலை மறைக்க இபிஎஸ் அவதூறு பரப்புகிறார்’ - அமைச்சர் தங்கம் தென்னரசு
“அதிமுக ஆட்சியின் ஊழல்களை மறைக்கவும், முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கைத் திசைதிருப்பவும் முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் குறித்து இபிஎஸ் அவதூறு பரப்புகிறார்” என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். மேலும் அவர் அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியை காலில் போட்டு மிதித்து, வர விரும்பிய தொழில் நிறுவனங்களையும் அண்டை மாநிலங்களுக்கு விரட்டி விட்டு ஆட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக யு.டி.காதர் தேர்வு: புதிய கர்நாடகா சட்டப்பேரவையின் சபாநாயகர் பதவிக்கு 5 முறை எம்எல்ஏவாக பதவி வகித்த யு.டி. காதரை காங்கிரஸ் கட்சி செவ்வாய்கிழமை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருக்கு எதிராக யாரும் போட்டியிடாததால், யு.டி.காதர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து புதன்கிழமை அவர் சபாநாயகராக பதவியேற்றுக்கொண்டார். 54 வயதாகும் காதர், கர்நாடக சட்டப்பேரவையில் சபாநாயகராகும் முதல் இஸ்லாமியர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி கடந்த திங்கள் கிழமை ஆஸ்திரேலியா சென்றார். அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிஸும் பிரதமர் மோடியும் புதன்கிழமை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தினர். அப்போது, ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட இந்து கோயில்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்தும், அந்நாட்டில் காலிஸ்தான் ஆதரவு சக்திகளின் செயல்பாடுகள் குறித்தும் அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிஸிடம் பிரதமர் மோடி மீண்டும் இந்தியாவின் கவலைகளை தெரிவித்தார். அதற்கு எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அல்பானிஸ் மீண்டும் என்னிடம் உறுதியளித்திருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
மூன்று நாள் பயணமாக கடந்த திங்கள் கிழமை ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடி, தனது பயணத்தின் கடைசி நாளான இன்று அந்நாட்டு தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளைச் சந்தித்தார். அப்போது, பேசிய பிரதமர், "இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை ஆஸ்திரேலிய நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். டிஜிட்டல் உள்கட்டமைப்பைப் பொருத்தவரை, தகவல் தொழில்நுட்பம், நிதிதொழில்நுட்பம், தொலைபேசி, செமிகண்டக்டர்ஸ், விண்வெளி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், கல்வி, மருந்து உற்பத்தி, சுகாதாரம், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு, கனிமவளங்கள், விவசாயம், உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் நீங்கள் முதலீடுகளை செய்ய முடியும்.
இந்தியாவில் தொழில் தொடங்குவது தற்போது எளிதாக்கப்பட்டுள்ளது. புகார்களைக் குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்நிய நேரடி முதலீட்டுக்கான நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன." என்று அழைப்பு விடுத்தார். இதனை வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் மீண்டும் வன்முறை; ஊரடங்கு ரத்து: மணிப்பூரில் இம்மாத தொடக்கத்தில் இருவேறு சமூகத்தவர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 73 பேர் கொல்லப்பட்டனர். 231 பேர் காயமடைந்தனர். மத வழிபாட்டுத்தலங்கள் உள்பட 1,700 கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து அடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிலைமை கண்காணிக்கப்பட்டு வந்தது. மேலும், பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்ட இடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிலைமை மேம்பட்டு வந்ததை அடுத்து, மணிப்பூரின் பல பகுதிகளில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், மணிப்பூரில் புதிதாக ஏற்பட்ட வன்முறையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஊடங்கு தளவர்வு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
கோவிட் 19-ஐ விட ஆபத்தான பெருந்தொற்று ஏற்பட வாய்ப்பு: கோவிட் தொற்றுநோயைவிட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான தொற்றுநோய் பரவ வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்ற உலக சுகாதார நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் டெட்ரோஸ் அதானம்,"கோவிட் பெருந்தொற்றால் உலகம் முழுவதும் 2 கோடி பேர் உயிரிழந்துள்ளனர். கோவிட் பெருந்தொற்று இனி உலகிற்கு அச்சுறுத்தலாக இருக்காது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும், அந்த பெருந்தொற்று மறைந்துவிடவில்லை. தொலைவில் இருக்கிறது. புதிய பெருந்தொற்று கோவிட் பெருந்தொற்றைவிட அதிக உடல் பாதிப்புகளையும், உயிர்ச் சேதங்களையும் ஏற்படுத்தும் என்பதால், அதனை எதிர்கொள்ள உலகம் தயாராக வேண்டும்" என்று தெரிவித்தார்.