கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக யு.டி.காதர் ஒருமனதாக தேர்வு

கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக யு.டி.காதர் ஒருமனதாக தேர்வு
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக யு.டி.காதர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த 10ம் தேதி நடைபெற்று அதில் பதிவான வாக்குகள் கடந்த 13ம் தேதி எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 135 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியதை அடுத்து, அதன் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக சிவகுமாரும் கடந்த சனிக்கிழமை பதவியேற்றுக்கொண்டனர்.

இதையடுத்து, புதிய சட்டப்பேரவையின் சபாநாயகர் பதவிக்கு 5 முறை எம்எல்ஏ-வாக பதவி வகித்த யு.டி. காதரை காங்கிரஸ் கட்சி நேற்று (செவ்வாய்கிழமை) அறிவித்தது. இதையடுத்து, முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். யு.டி. காதருக்கு எதிராக யாரும் போட்டியிடாததால் அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து இன்று அவர் சபாநாயகராக பதவியேற்றுக்கொண்டார்.

முன்னதாக, இடைக்கால சபாநாயகர் ஆர்.வி.தேஷ்பாண்டே, சபாநாயகர் தேர்வு தொடர்பான நடவடிக்கைகளை சட்டப்பேரவையில் மேற்கொண்டார். யு.டி.காதரை முதல்வர் சித்தராமையா முன்மொழிய, துணை முதல்வர் சிவகுமார் வழிமொழிந்தார். இதையடுத்து ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட காதரை, முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் சபாநாயகர் இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர். 54 வயதாகும் காதர், கர்நாடக சட்டப்பேரவையில் சபாநாயகராகும் முதல் இஸ்லாமியர். இரண்டாவது இளம் சபாநாயகர். தேவெ கவுடா முதல்வராக இருந்தபோது ரமேஷ் குமார் சபாநாயகராக பொறுப்பேற்றார். அப்போது அவருக்கு வயது 43.

யு.டி. காதரின் பின்னணி: கர்நாடகாவின் உல்லால் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த யு.டி. ஃபரீத்-ன் மறைவை அடுத்து அத்தொகுதிக்கு கடந்த 2007ல் நடைபெற்ற இடைத் தேர்தலில் அவரது மகனான யு.டி. காதர் நிறுத்தப்பட்டார். இதில் வெற்றி பெற்று முதல்முறையாக கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினராக காதர் தேர்வானார். அதன்பிறகு அந்த தொகுதி மங்களூரு தொகுதியாக மாற்றப்பட்டது.

தொடர்ந்து மங்களூரு தொகுதியில் போட்டியிட்டு காதர் 4 முறை வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2013-18ல் சித்தராமையா தலைமையிலான அரசில் உணவுத் துறை அமைச்சராக இருந்த காதர், 2018-19ல் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்துள்ளார். கடந்த முறை பாஜக ஆட்சியில் இருந்தபோது சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக காதர் இருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in