சிங்கப்பூர்  வர்த்தகத் துறை அமைச்சருடன் முதல்வர் சந்திப்பு
சிங்கப்பூர்  வர்த்தகத் துறை அமைச்சருடன் முதல்வர் சந்திப்பு

சிங்கப்பூர் வர்த்தகத் துறை அமைச்சருடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு: பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சு

Published on

சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றம் வர்த்தகத் துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரனை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த இரு நாடுகளுடனான தமிழகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதற்காக நேற்று (23ம் தேதி ) முதல்வர் சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இன்று (24-ம் தேதி ) சிங்கப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின், Temasek, Sembcorp, CapitaLand ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலையை எடுத்துக்கூறி, தமிழகத்தில் தொழில் முதலீடுகள் செய்திட வேண்டுமென்று கோரிக்கை விடுத்து, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.

இதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரனை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, இரு நாடுகளுக்கிடையே உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது பற்றியும், புதிய தொழில் முதலீடுகளை தமிழகத்தில் மேற்கொள்வது குறித்தும் உரையாடியதோடு, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.

இச்சந்திப்பின்போது, அமைச்சர் ஈஸ்வரன், வழக்கமான முதலீடுகள் தவிர பசுமைப் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற துறைகளில் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளது குறித்தும், செமிகண்டக்டர்கள் மற்றும் எலக்ட்ரானிக் உதிரி பாகங்கள் தயாரிப்பிற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் முதல்வரிடம் விவாதித்ததோடு, அக்டோபர் மாதம் சிங்கப்பூரில் நடக்கவிருக்கும் Fintech மாநாட்டிற்கு தமிழ்நாடு அரசின் குழுவை அனுப்பிடவும் கேட்டுக் கொண்டார்.

மேலும் முதல்வர், சிங்கப்பூரைச் சேர்ந்த செம்ப்கார்ப் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாட்டில் பசுமை சக்தியை உருவாக்குவது குறித்தும் பேசி வருவதாக அமைச்சர் ஈஸ்வரனிடம் தெரிவித்தார். தமிழக அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருவதற்காக, அமைச்சர் ஈஸ்வரன் தனது பாராட்டுகளை முதல்வருக்கு தெரிவித்துக் கொண்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in