Published : 24 May 2023 05:32 AM
Last Updated : 24 May 2023 05:32 AM

சித்தராமையா மேடையில் குவிந்த எதிர்க்கட்சி தலைவர்கள் - மக்களவை தேர்தலில் பலன் தருமா?

புதுடெல்லி: கடந்த 2018-ல் மதசார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி கர்நாடகாவின் முதல்வராகப் பதவி ஏற்றார். அந்த விழாவில் பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்து மேடை ஏறி பெருமிதம் காட்டினர். இதேபோன்ற ஒரு காட்சி கடந்த 20-ம் தேதி காங்கிரஸ் முதல்வரான சித்தராமையாவின் பதவி ஏற்பிலும் காண முடிந்தது. பாஜகவை எதிர்க்கும் சுமார் 20 கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதில், திரிணமூல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதியின் அகிலேஷ் சிங் யாதவ், பகுஜன் சமாஜின் மாயாவதி, பாரத் ராஷ்டிர சமிதியின் கே.சந்திரசேகர ராவ் ஆகிய முக்கியத் தலைவர்களை காண முடியவில்லை. மேலும் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் அழைக்கப்படவில்லை.

எனினும், மத்தியில் தலைமை ஏற்று நடத்தும் பாஜகவை இந்த முறை எப்பாடுபட்டாவது ஆட்சியிலிருந்து அகற்றும் முயற்சி நடைபெறுகிறது. இப்பணியை பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ்குமார் முன்னெடுத்து வருகிறார்.

நிதிஷின் முயற்சிக்கு அனைத்து எதிர்கட்சித் தலைவர்களும் இந்த முறை ஆதரவளித்திருந்தனர். குறிப்பாக, காங்கிரஸுடன் கைகோக்கத் தயங்கியவர்கள், நிதிஷின் கோரிக்கையால் இறங்கிவந்தனர். இச்சூழலில், கர்நாடகாவின் புதிய முதல்வர் சித்தராமையாவின் பதவி ஏற்பில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் இடம் பெற்றிருக்கவில்லை.

இதனால், 2019 தேர்தலை போலவே 2024 மக்களவை தேர்தலிலும் எதிர்க்கட்சிகள் வலுவடைவதன் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் காங்கிரஸ் தலைவர்களின் கணிப்பு வேறாக உள்ளது.

நாட்டின் பெரும்பாலான மாநிலங்களின் சுமார் 250 மக்களவை தொகுதிகளில் பாஜகவை நேரடியாகக் காங்கிரஸே எதிர்க்கிறது. இதர மாநிலங்களில் சுமார் 20 கட்சிகளுடன் காங்கிரஸ் மக்களவை தேர்தலுக்கு முன்பாகவே கூட்டணி அமைக்கும். இதில், ஜார்க்கண்ட், பிஹார், தமிழ்நாடு மற்றும் மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் ஏற்கெனவே ஆளும்கட்சியின் கூட்டணியாக உள்ளது.

ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் மாநிலங்களை ஆளும் கட்சிகள் காங்கிரஸிலிருந்து பிரிந்தவையே. எனவே, இவர்களுடன் மக்களவை தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைப்பதில் எந்த சிக்கலும் இருக்க முடியாது உள்ளிட்டவை காங்கிரஸின் திட்டமாக உள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் முன்னாள் மத்திய அமைச்சரும் கர்நாடகா காங்கிரஸின் பொறுப்பாளருமான சுதர்சன நாச்சியப்பன் கூறும்போது “மாநிலங்களை ஆளும் கட்சிகளை ஒரேயடியாக ஒழித்துக் கட்ட பாஜக விரும்புகிறது. இவை ஒழிந்தால் காங்கிரஸ் அழிந்து விடும் என்பது அக்கட்சியின் எண்ணமாக உள்ளது. இதுபோல், மாநிலக் கட்சிகளை ஒழிக்க காங்கிரஸ் எப்போதும் நினைத்ததில்லை.

ஆந்திரா, தெலங்கானா, கேரளா, ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் மக்களவை தேர்தலுக்காக ஒப்பந்தம் போடப்படும். இந்தமுறை புதியவகை அணுகுமுறையில் பாஜக மத்தியிலிருந்து அகற்றப்படுவது உறுதி என்றார்.

இந்த கூற்றை ஆமோதிக்கும் விதத்தில் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா, எந்தெந்த மாநிலங்களில் பிராந்தியக் கட்சிகள் வலுவாக உள்ளனவோ அங்கு காங்கிரஸ் சிறிது விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற ஆலோசனையை வழங்கியுள்ளார்.

இதர எதிர்கட்சிகளுக்கு காங்கிரஸ் வளைந்து கொடுப்பதை பொறுத்தே 2024 மக்களவை தேர்தல் முடிவுகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதன்மூலம், காங்கிரஸின் நேரடிப் போட்டியிலுள்ள ஆம் ஆத்மி, பாரத் ராஷ்டிர சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் பெற முடியும் என்ற கருத்தும் நிலவுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x