Published : 17 May 2023 04:54 AM
Last Updated : 17 May 2023 04:54 AM

உடல் எடையை குறைக்க முடியாத போலீஸாருக்கு விருப்ப ஓய்வு - அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா எச்சரிக்கை

குவாஹாட்டி: உடல் எடையைக் குறைக்க முடியாத போலீஸார் விருப்ப ஓய்வுத் திட்டத்தின் (விஆர்எஸ்) கீழ் ஓய்வு பெற்றுச் செல்லலாம் என்று அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா கூறியுள்ளார்.

அசாம் மாநில காவல்துறையில் அதிரடி சீர்திருத்தங்களைக் கொண்டு வர முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா முடிவு செய்துள்ளார்.

அதன் ஒரு பகுதியாக, போலீஸார் தங்களது உடலை முழு தகுதியுடன் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களை முதல்வர் ஹிமந்தா, போலீஸ் டிஜிபி கியானேந்திர பிரதாப் சிங் ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ளனர்.

வரும் நவம்பர் மாதத்துக்குள் உடல் பருமனாக உள்ள போலீஸார் தங்களது உடல் எடையைக் குறைத்து முழு தகுதியுடன் இருக்க வேண்டும். அப்படி குறைக்க முடியாத போலீஸார் விஆர்எஸ் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்றுச் செல்லலாம் என்று அசாம் மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து அசாம் காவல்துறையில் அனைத்து போலீஸாருக்கும் (ஐபிஎஸ், ஏபிஎஸ் (அசாம் மாநில போலீஸ் சேவைப் பிரிவு) உடற்தகுதி பரிசோதனை, உடல் எடை குறியீட்டெண் (பிஎம்ஐ) சோதனை ஆகியவற்றை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்குள் அனைத்து போலீஸாருக்கும் இந்த சோதனை நடத்தப்படும். இந்த சோதனையின் முடிவில் தங்களது உயரத்துக்கேற்ற அளவில் உடல் எடை இல்லாத போலீஸார் தங்களது உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.

பிஎம்ஐ 30 பிளஸ் பிரிவில் உள்ளவர்களுக்கு மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கப்படும். அதன் பின்னரும் அவர்கள் உடல் எடையைக் குறைக்க முடியாவிட்டால் விஆர்எஸ் திட்டம் கொண்டு வரப்படும். இதில் மருத்துவப் பிரச்சினை உள்ளவர்களுக்கு விதிவிலக்கு வழங்கப்படும் என்று அசாம் அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x