Published : 17 Oct 2017 09:07 AM
Last Updated : 17 Oct 2017 09:07 AM

மொத்த விற்பனை வருவாய்க்கும் லாபத்துக்கும் வேறுபாடு தெரியாத ராகுல்: பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தாக்கு

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு, மொத்த விற்பனை வருவாய்க்கும் லாபத்துக்கும் வேறுபாடு தெரியவில்லை என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா குற்றம் சாட்டினார்.

அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா நடத்தி வரும் தொழில் நிறுவனம், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த அபரிதமான வளர்ச்சி அடைந்துள்ளதாக ‘தி வையர்’ என்ற இணைய இதழ் செய்தி வெளியிட்டது. இப்புகாரால் சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், ஜெய் நிறுவனத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை என்று அமித் ஷா கூறினார்.

இந்நிலையில் அகமதாபாத்தில் டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமித் ஷா கூறும்போது, “ஜெய் ஷா சட்டத்துக்கு உட்பட்டு தொழில் செய்து வருகிறார். எனவேதான் செய்தி வெளியிட்ட இணைய இதழுக்கு எதிராக ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். ராகுல் காந்தி என்ன சொல்கிறார் என்பது பற்றி நான் கவலைப்படவில்லை. அவர், மொத்த விற்பனை வருவாய்க்கும் லாபத்துக்கும் வேறுபாடு தெரியாதவர்.

எனது மகன் மீதான குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. எனவேதான் விசாரணை குறித்த கோரிக்கை எழுவதற்கு முன் அவர் நீதிமன்றம் சென்றுள்ளார்.

எனது மகன் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் நஷ்டமும் ஏற்படலாம். கடனுக்கும் கடனுக்கான உத்தரவாதத்துக்கும் ராகுல் காந்திக்கு வேறுபாடு தெரியவில்லை. அனைத்து கடன்களும் அடைக்கப்பட்டுள்ளன. அரசுடன் எந்த வர்த்தகத்திலும் ஜெய்ஷா ஈடுபடவில்லை. எந்த அரசு நிலத்தையும் அவர் கைப்பற்றவில்லை. ஒப்பந்ததாரர்களுடன் அவருக்கு எவ்வித தொடர்பும் இல்லை” என்றார்.

ஜெய்ஷாவுக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உதவியதில் எவ்வித தவறும் இல்லை என்றார் அமித் ஷா. இது தொடர்பாக அவர் கூறும்போது, “ஜெய்ஷாவுக்கு அமைச்சர் என்ற முறையில் பியூஷ் கோயல் உதவவில்லை. பாஜக தலைவர் என்ற முறையில்தான் உதவினார். அவ்வாறு உதவியதில் பியூஷ் கோயல் என்ற குற்றம் செய்துவிட்டார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x